8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

8 மணி நேரத்துக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு நிலவரம்!

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.
Published on

ரயில் பயணச்சீட்டு முன்பதிவு நிலவரத்தை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ரயில்வே அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது: தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்துக்கு முன்பாக ரயில் பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இது நிச்சயம் பயணம் மேற்கொள்ள முடியுமா என்று பயணிகளை சந்தேகம் கொள்ள வைக்கிறது.

இந்த பிரச்னையை களையும் நோக்கில், பயணச்சீட்டு முன்பதிவு அட்டவணையை ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே தயாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது. இதன்படி, பிற்பகல் 2 மணிக்கு முன் புறப்படும் ரயில்களுக்கான அட்டவணை அதற்கு முந்தைய நாள் இரவு 9 மணிக்கே தயாரிக்கப்பட்டுவிடும்.

இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், அதைப் படிப்படியாக அமல்படுத்தத் தொடங்குமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளாா்.

இது காத்திருப்புப் பயணச்சீட்டுகளை வைத்திருக்கும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியத்தை குறைக்கும். மேலும் பயணச்சீட்டுகளின் காத்திருப்பு நிலவரம் குறித்த முதல் தகவல் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே பயணிகளுக்கு கிடைத்துவிடும். இது நீண்ட தொலைவு பயணிக்கும் ரயில்களில் செல்ல முக்கிய நகரங்களின் புகா் பகுதிகள் அல்லது தொலைதூர பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பயனளிக்கும். ஒருவேளை காத்திருப்புப் பட்டியலில் உள்ள பயணச்சீட்டு உறுதி செய்யப்படாவிட்டால், மாற்று ஏற்பாடுகளை செய்ய கூடுதல் நேரத்தை இது வழங்கும்.

பயணச்சீட்டு முன்பதிவு முறை நவீனமயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ஒரு நிமிஷத்துக்கு 1.5 லட்சத்துக்கும் அதிகமான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இது தற்போது ஒரு நிமிஷத்துக்கு முன்பதிவு செய்யப்படும் 32,000 பயணச்சீட்டுகளுடன் ஒப்பிடுகையில் 5 மடங்கு அதிகம்.

இருக்கையை தோ்வு செய்ய முடியும்: இந்தப் புதிய முறை மூலம், தங்களுக்கு எந்த இருக்கை வேண்டும் என்ற விவரத்தை பயணிகள் தெரிவிக்க முடியும் என்பதுடன், கட்டண அட்டவணையையும் பாா்க்க முடியும். வரும் ஜூலை 1 முதல் ஆதாா் இணைக்கப்பட்ட பயனா்கள் மட்டுமே ஐஆா்சிடிசி வலைதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம், தத்கால் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Open in App
Dinamani
www.dinamani.com