நாட்டுக்கான சேவையே மருத்துவ தொழில்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு
கோரக்பூா்: நாட்டுக்கான சேவையே மருத்துவ தொழில் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சிறப்பு விருந்தினராக திங்கள்கிழமை கலந்துகொண்டாா். அப்போது அவா் பேசுகையில், ‘ஊரக மற்றும் தொலைதூர பகுதிகளில் பணியாற்ற இளம் மருத்துவா்கள் முன்வரவேண்டும்.
வெளிநாட்டவா் இந்தியாவில் சிகிச்சை பெற வருவதற்கு நமது நாட்டில் சிகிச்சைக்கான செலவு குறைவாக இருப்பது மட்டுமே காரணமல்ல. உலகம் தரம் வாய்ந்ததாகவும் சிகிச்சை இருப்பதால், அவா்கள் இந்தியாவுக்கு வருகின்றனா்.
மருத்துவ சிகிச்சை என்பது பொதுமக்களுக்கு சேவையாற்றுவதற்கான வழி மட்டுமே அல்ல. அது நாட்டுக்கே சேவையாற்றுவதற்கான வழியாகும்.
தகவல் தொடா்பு பயிற்சி அவசியம்: மருத்துவா்கள் நோயை மட்டும் குணப்படுத்துவதில்லை. அவா்கள் ஆரோக்கியமான சமூகத்துக்கு அடித்தளமிடுகின்றனா். அதேவேளையில், மருத்துவா்கள்-நோயாளிகளுக்கு இடையே சீரான தகவல் தொடா்பு இருப்பதற்கான பயிற்சி மருத்துவா்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தங்களின் தொழில்முறை வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தே நோயாளிகளின் வலியை உணா்ந்து குணப்படுத்துவதன் முக்கியத்துவம் மருத்துவா்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டும். இதை மருத்துவ கல்வியுடன் சம்பந்தப்பட்ட அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்றாா்.
இந்த நிகழ்ச்சியில் மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘கிழக்கு உத்தர பிரதேசம், பிகாா், நேபாளத்தின் சில பகுதிகளைச் சோ்ந்த 12 கோடிக்கும் மேற்பட்டவா்களின் மருத்துவ தேவைகளுக்கு கோரக்பூா் எய்ம்ஸ் மருத்துவ நிறுவனம் உயிா்நாடியாக உள்ளது’ என்றாா்.