மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு

பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், கோத்தாலி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளும் அவரது நண்பர்களும் கலந்து கொண்டனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சென்ற சிலர் அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். அமைச்சர் மகள் உள்ளிட்ட சிறுமிகளின் புகைப்படங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் இந்த நபர்கள் எடுத்துள்ளனர். அமைச்சரின் மகளுக்குத் துணையாகச் சென்ற மெய்க்காப்பாளர்கள் இதை எதிர்த்தபோது அந்த நபர்கள் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக முக்தாய்நகர் காவல் நிலையத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே புகார் அளித்தார். அதன்படி 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களில் ஒருவரான சோஹம் மாலி என்பவரைக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட மற்ற நபர்களையும் கைது செய்வதற்காக போலீஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்ட 7 பேர் மீதும் பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸே செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் வெள்ளிக்கிழமை குஜராத்தில் இருந்தேன். அன்று கோத்தாலி கிராமத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி கோருவதற்காக என்னை என் மகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். மெய்க்காப்பாளர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு அங்கு செல்லுமாறு நான் கூறினேன். அங்கு சென்றபோது எனது மகளையும் அவளது நண்பர்களையும் சில நபர்கள் பிடித்து தள்ளியதுடன் அவர்களை புகைப்படம் மற்றும் விடியோவும் எடுத்துள்ளனர்.

இதே நபர்கள் கடந்த 24-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியின்போதும் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக என் மகள் தெரிவித்தாள். இது துரதிருஷ்டவசமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மத்திய அமைச்சரின் மகளுக்கே இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் சாமானிய மக்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுடனும், காவல் துறை கண்காணிப்பாளருடனும் பேசியுள்ளேன் என்றார்.

இச்சம்பவம் குறித்து முதல்வர் ஃபட்னவீஸ், ராய்கட் நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் "கட்ஸேயின் மகளை துன்புறுத்தியவர்கள் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் சிலரை உள்ளூர் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com