
ஜனநாயக நாட்டில் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, எடைக் கூடுதலாக இருக்கிறார் என்று ஷாமா முகமது தெரிவித்த கருத்து கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஷாமா முகமது கருத்துக்கு கடும் கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு ஷாமா முகமது அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசியதாவது:
“இது ஒரு விளையாட்டு வீரரின் உடற்தகுதி பற்றிய பொதுவான ட்வீட். உடல் ரீதியிலாக அவமானப்படுத்துவதாக இல்லை. ஒரு விளையாட்டு வீரர் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம். அவர் கொஞ்சம் அதிக எடை கொண்டவர் என்று உணர்ந்தேன், அதனால் நான் அதைப் பற்றி ட்வீட் செய்தேன்.
ஆனால், என்னை தாக்குகின்றனர். முந்தைய கேப்டன்களுடன் அவரை ஒப்பிட்டுப் பார்த்தபோது, நான் ஒரு ட்வீட்டை வெளியிட்டேன். அதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனைச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? இதற்கு ஜனநாயகத்தில் இடமுண்டு” எனத் தெரிவித்தார்.
நடந்தது என்ன?
இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் விளையாடி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 17 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானைச் சேர்ந்த செய்தியாளர் ரோஹித் சர்மா சிறந்த ஆட்டக்காரர் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பதிவிட்ட காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது, “ரோஹித் உடல் பருமனான விளையாட்டு வீரர். அவர் எடையைக் குறைக்க வேண்டும். அதேபோல, இந்திய கேப்டன்களில் தகுதியில்லாத கேப்டன் இவர்தான்” என்று பதிவிட்டிருந்தார்.
அவர் ஒரு சாதாரண வீரர். சாதாரண கேப்டன். அதிர்ஷ்டத்தால் இந்திய அணியின் கேப்டனாகி விட்டார்” என விமர்சித்தார்.
அவரது கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடையே மட்டுமின்றி பாஜகவினரிடமும் கடுமையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவை ஷாமா நீக்கிவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.