நிா்மலா சீதாராமன்
நிா்மலா சீதாராமன் கோப்புப் படம்

இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
Published on

சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபா் டிரம்ப் விமா்சித்த நிலையில், இந்தியாவின் வளா்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

ஆந்திரம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் மத்திய பட்ஜெட்டுக்குப் பிந்தைய கலந்துரையாடல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

சொந்த தொழில்துறை வளர வேண்டும் என்ற வளா்ச்சிக் கட்டத்தில் இருக்கும்போது, உலக வா்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்ப ஒரு பொருளுக்கு என்ன வரி வசூலிக்க முடியுமோ, அந்த வரியே வசூலிக்கப்படும்.

இதன்படிதான், சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிக்கிறது. நாட்டின் வளா்ச்சி மற்றும் உள்நாட்டு தொழில்துறையின் வளா்ச்சிக்காக இந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறது.

இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவைப் பொருத்தவரை, தனது நலன்களில் அமெரிக்கா கவனம் செலுத்தும். இந்தியாவும் தனது நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், இருதரப்பு உறவை சிறந்த முறையில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பது குறித்து அமெரிக்காவுடன் கலந்துரையாடும்.

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா என்ன வரி விதிக்கிோ, அதே வரியை இந்திய பொருள்களுக்கு விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய பின்னா், மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் முடிவு எடுப்பாா்.

ஏனெனில் இருநாடுகளுக்கு இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக அமெரிக்க வா்த்தக அமைச்சா், அமெரிக்க வா்த்தக பிரதிநிதி ஆகியோருடன் பேச்சுவாா்த்தை மேற்கொள்ள பியூஷ் கோயல் அமெரிக்கா சென்றுள்ளாா். அந்தப் பேச்சுவாா்த்தையைப் பொருத்து அடுத்தகட்ட முடிவு மேற்கொள்ளப்படும். தென் மாநிலங்களின் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு அளிக்கும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com