பறவைக் காய்ச்சல் பாதிப்பு: கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா?

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையல் கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா என்பது பற்றி..
பறவைக் காய்ச்சல்
பறவைக் காய்ச்சல்
Published on
Updated on
1 min read

நமது அண்டை மாநிலங்களான ஆந்திரம், கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோழிக்கறி, முட்டை சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.

அதாவது, பறவைக் காய்ச்சல் பாதிப்பு குறித்து செய்தி வெளியாகும்போதெல்லாம், கோழிக்கறி மற்றும் முட்டை விலை குறைந்துவிடும். மக்களுக்கும் பறவைக் காய்ச்சல் குறித்த அச்சத்தில், கோழிக்கறி, முட்டைகளை வாங்குவதை குறைத்துவிடுவார்கள்.

இந்த நிலையில் தற்போது முட்டை விலை சரிந்து கொள்முதல் விலையே ரூ.3.80 ஆக உள்ளது. அதாவது கடந்த 5 நாள்களில் மட்டும் ரூ.1.10 காசுகள் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், நாள்தோறும் முட்டை உற்பத்தியாளர்களுக்கு ரூ.7 கோடிக்கு நஷ்டம் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, கோழிக்கறி விலையும் குறைந்திருக்கிறது.

ஆனால், சுகாதாரத் துறையினர் இதுபற்றி கூறுகையில், பறவைக் காய்ச்சல் ஒருபோதும் சமைத்த உணவு மூலம் பரவுவதில்லை. அதாவது, கோழிக்கறி மற்றும் முட்டையை நன்கு சமைத்து சாப்பிட்டால் அது பாதுகாப்பானதுதான் என்றும், முறையாக சமைக்கப்பட்ட உணவில் பறவைக் காய்ச்சல் கிருமி இருப்பதில்லை என்றும் இந்திய சுகாதாரத் துறையும், உலக சுகாதார அமைப்பும் விளக்கம் கொடுத்துள்ளன.

பறவைகளுக்கு மட்டும்தான் பரவுமா?

பறவைக் காய்ச்சல் நோய் என்பது பறவை இனங்களைத் தாக்கும் ஒரு வைரல் தொற்று நோய். கோழி, வாத்து, வான்கோழி, நீா்ப்பறவைகள் மற்றும் வனப் பறவைகள் ஆகியவற்றை இந்நோய் தாக்கும். பறவைக் காய்ச்சல் நோய்க்கான வைரஸ் கிருமிகள் பல வகை இருந்தாலும், ஏ5என்1என்ற வகை வைரஸ் கிருமி அதிகம் வீரியம் வாய்ந்தது.

நோய் பாதித்த பண்ணைகளில் இறந்த கோழிகள், கோழிக்கழிவுகள், பண்ணை உபகரணங்கள் மற்றும் கோழித் தீவனம் மூலமாக இந்நோய் பரவுகிறது. இந்நோய்க்கு சிகிச்சை எதுவும் இல்லை. நோய் தடுப்பு முறைகளையும், உயிா்ப் பாதுகாப்பு முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

மனிதர்களை பாதிக்குமா?

வாத்து மற்றும் கோழிப்பண்ணைகளுக்குள் செல்பவா்களும், வெளியே வருபவா்களும் கிருமி நாசினியால் கால்களைச் சுத்தம் செய்த பின்னரே செல்ல வேண்டும். பண்ணையில் இறந்த வாத்து மற்றும் கோழிகளை உடனுக்குடன் முறையாக கோழி இறப்புக் குழியில் கிருமிநாசினி தெளித்துப் புதைக்க வேண்டும். பண்ணையினுள் நுழையும் அனைத்து வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

ஏனென்றால் மனிதர்களையும் பறவைக் காய்ச்சல் கிருமி தாக்குகிறது. கால்நடைகளையும் தாக்குவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

வாத்து மற்றும் கோழிப்பண்ணையில் அசாதாரண இறப்பு ஏதேனும் ஏற்பட்டால் உடனடியாக கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பண்ணையாளா்கள் வேறு பண்ணைகளுக்குச் செல்வதையும் மற்றும் தங்கள் பண்ணைக்குள் பாா்வையாளா்களை அனுமதிப்பதையும் தவிா்க்க வேண்டும்.

பிற மாநிலத்திற்கு முட்டைகளை எடுத்துச் செல்ல கண்டிப்பாக காகித அட்டைப் பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். காகித அட்டைகளை எக்காரணத்தைக் கொண்டும் திரும்ப எடுத்து வரக்கூடாது எனவும் முட்டை பண்ணை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com