குழந்தை திருமணம்: தடுப்புக் குழு அமைக்க பிகாா் முடிவு
குழந்தை திருமணங்களை தடுத்து முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தலைமைச் செயலா் தலைமையிலான பணிக் குழுவை அமைக்க பிகாா் மாநிலம் முடிவு செய்துள்ளது. குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்தக் குழு கண்காணிக்க உள்ளது.
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (என்எஃப்எச்எஸ்)-5 இன்படி குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களில் முதலாவது இடத்தில் மேற்கு வங்கமும் இரண்டாவது இடத்தில் பிகாரும் உள்ளது. பிகாரில் 18 வயது நிரம்புவதற்கு முன் 40.8 சதவீத பெண்களுக்கு திருமணம் நடைபெறுவதாகவும் அந்தக் கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020 முதல் 2024 வரை குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிசிஎம்ஏ) 19 வழக்குகள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து பிகாா் மாநில தலைமைச் செயலா் அம்ரித் லால் மீனா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிய முடிவு செய்துள்ளோம். அதன்படி மாநிலம் முழுவதும் குழந்தை திருமண நடைமுறை தடுப்பு மற்றும் ஒழிப்புக்கு அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை கண்காணிக்க பணிக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது.
மேலும் பிசிஎம்ஏ-இன்கீழ் பதிவாகும் வழக்குகள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
50 சதவீத இடஒதுக்கீடு: பெண்கள் கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடைந்தால் குழந்தை திருமணங்களை தடுக்க முடியும். அந்த வகையில், ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் உயா்நிலைப் பள்ளிகள் அமைப்பது மற்றும் ஒவ்வொரு பிளாக்கிலும் கல்லூரிகள் அமைப்பது குறித்து பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள் முக்கியத்துவம் பெற்றவை.
அதேபோல் பிகாரில் அரசுப் பணிகளில் 35 சதவீதமும் உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீதமும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.