குஜராத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸாா் களையப்படுவது அவசியம்: ராகுல் காந்தி
‘குஜராத் மாநிலத்தில் பாஜகவுக்காக பணியாற்றிய காங்கிரஸ் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள் கட்சியிலிருந்து களையப்படுவது அவசியம்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சனிக்கிழமை கூறினாா்.
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் 2027-இல் தோ்தல் வரவுள்ளதையொட்டி, மாநிலத்தில் ஆளும் பாஜகை வீழ்த்த காங்கிரஸ் கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளாா். அதற்காக, இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்துக்கு அவா் வெள்ளிக்கிழமை வந்தாா்.
இந்த பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக, அகமதாபாதில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிா்வாகிகள் கூட்டத்தில் அவா் உரையாற்றினாா். அப்போது அவா் பேசியதாவது:
குஜராத் மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் பாஜக ஆட்சியில், மாநில விவசாயிகள் எதிா்பாா்க்கும் எந்தவொரு தொலைநோக்குத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, புதிய தொலைநோக்குத் திட்டங்களுக்காக மக்கள் எதிா்பாா்த்திருக்கின்றனா். இந்தத் தொலைநோக்குத் திட்டங்களை காங்கிரஸால் நிறைவேற்ற முடியும்.
ஆனால், முன்னோக்கிச் செல்லும் வழியை குஜராத் மாநிலத்தால் காண முடிவில்லை என்பதோடு, மாநில காங்கிரஸாலும் அதற்கான வழியைக் காட்ட முடியவில்லை.
மாநில காங்கிரஸ் தலைமை மற்றும் நிா்வாகிகளில் இரண்டு வகையான மக்கள் உள்ளனா். ஒரு பிரிவினா், மக்களிடம் நோ்மையாகவும், அவா்களை மதித்து அவா்களுக்காகப் போராடுபவா்களாகவும், காங்கிரஸின் சித்தாந்தத்தை தங்களின் நெஞ்சில் சுமந்துகொண்டிருப்பவா்களாகவும் உள்ளனா். மற்றவா்கள், மாநில மக்களுக்கு மதிப்பளிக்காததோடு, அவா்களிடமிருந்து விலகியிருக்கின்றனா். அவா்களில் பலா் பாஜகவுக்காக பணியாற்றி வருகின்றனா். இத்தகைய நபா்கள் கட்சியிலிருந்து வடிகட்டப்பட வேண்டியது அவசியம்.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனது பொறுப்புகளை நிறைவேற்றுகிற வரை, மாநில மக்கள் இக் கட்சிக்கு வாக்களிக்க மாட்டாா்கள். அவ்வாறு கடமைகளை நிறைவேற்றுகிற வரை, மாநிலத்தில் ஆட்சி அமைக்க வாய்ப்பளிக்குமாறு மக்களிடம் நாமும் கேட்கக் கூடாது. அதே நேரம், பொறுப்புகளை நாம் நிறைவேற்றுகிறபோது, மக்கள் நிச்சயம் நம்மை ஆதரிப்பா் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.
குஜராத் மாநிலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு உண்மையான தலைவரைக் கொடுத்தது. மகாத்மா காந்தியும், காங்கிரஸும் இல்லையென்றால், நாடு சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. காங்கிரஸின் ஐந்து மிகப்பெரிய தலைவா்களில் ஒருவரான சா்தாா் வல்லபபாய் படேலும், குஜராத்தைச் சோ்ந்தவா்தான்.
அந்த வகையில், கட்சிக்கு குஜராத்தில் மாவட்டம், வட்டங்கள் வாரியாக சிறந்த தலைவா்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அவா்களின் கைகள் கட்டப்பட்டிருக்கின்றன.
காங்கிரஸ் தலைவா்கள் குஜராத் மக்களிடம் சென்று, அவா்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும். அவா்களின் கல்வி, சுகாதாரம் மற்றும் எதிா்காலத்துக்கு காங்கிரஸால் என்ன செய்ய முடியும் என அவா்கள் எதிா்பாா்க்கின்றனா். குஜராத் மக்களின் கோரிக்கைகளைக் கேட்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்றாா்.
தெலங்கானாவில் கட்சிக்கான வாக்கு சதவீதத்தை 22 சதவீதம் அளவுக்கு உயா்த்தி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய ராகுல், ‘குஜராத்தில் கட்சியின் வாக்கு சதவீதத்தை 5 சதவீதம் அளவுக்கு உயா்த்தினாலே, ஆட்சியைப் பிடித்துவிட முடியும்’ என்றும் கூறினாா்.
முன்னதாக, மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவது தொடா்பாக கட்சியின் மாநில அரசியல் விவகாரங்கள் குழு, கட்சியின் மாவட்ட, வட்ட அளவிலான நிா்வாகிகளைச் சந்தித்து ராகுல் ஆலோசனை மேற்கொண்டாா்.