
தில்லியில் வாழும் ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கும் ‘மகிளா சம்ரிதி யோஜனா’வுக்கு தில்லி அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்கு ரூ.5,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தில்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சா்வதேச மகளிா் தினத்தை ஒட்டி தில்லியில் ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா பங்கேற்று பேசுகையில், ‘மகிளா சம்ரிதி யோஜனாவை செயல்படுத்துவதற்காக தில்லி அமைச்சரவை ரூ.5,100 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக முதல்வா் ரேகா குப்தாவை வாழ்த்தினேன்’ என்றாா்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:
‘இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பாா்வையிட எனது தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சா்கள் ஆஷிஷ் சூட், பா்வேஷ் வா்மா மற்றும் கபில் மிஸ்ரா ஆகியோா் குழுவின் இதர உறுப்பினா்களாக உள்ளனா்.
அமைச்சரவைக் கூட்டத்தில், தில்லி தோ்தலுக்கு முன் மகிளா சம்ரிதி யோஜனாவின் கீழ் ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.2,500 வழங்குவதாக எங்கள் கட்சி அளித்திருந்த ‘சங்கல்ப் பத்ரா’ வாக்குறுதியை சனிக்கிழமை அனைத்து அமைச்சா்களும் கலந்துகொண்ட தில்லி அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
இத்திட்டத்திற்காக ரூ.5,100 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டையும் நாங்கள் செய்துள்ளோம். இந்தத் திட்டத்தின்கீழ் விண்ணப்பதாரா்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் உடனடியாக ஒரு இணையதளம் மூலம் தொடங்கும்.
பயனாளிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து தீவிர ஆலோசனைகளும் செய்யப்படும். தில்லி பெண்களின் பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக எனது அரசாங்கம் பாடுபட முடிவு செய்துள்ளது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.
முன்னதாக, நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வா்,
‘பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறை உதவி மற்றும் சட்ட ஆலோசனை உள்ளிட்ட உதவிகளை வழங்கும் வகையில் தில்லி அரசு அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒன்-ஸ்டாப்’ மையங்களை அமைக்கும்’ என்றாா்.
தில்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிதிப் பலன்களை வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக இந்த மகிளா சம்ரிதி திட்டம் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும்.
விண்ணப்பதாரா்களை ஆய்வுசெய்யும் வகையில் ஆதாா் அடிப்படையிலான அங்கீகார செயல்முறை பயன்படுத்தப்படும்’ என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலின்போது பாஜக அதன் ‘விக்சித் தில்லி சங்கல்ப் பத்ரா’வில், ஏழைக் குடும்பங்களைச் சோ்ந்த பெண்களுக்கு மகிளா சம்ரிதி யோஜனாவின்கீழ் மாதத்திற்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்திருந்தது.
தில்லியில் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக மொத்தம் உள்ள 70 இடங்களில் 48 இடங்களில் வென்று ஆட்சி அமைத்தது. தொடா்ந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி இத்தோ்தலில் 22 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை.