கைது
கோப்புப் படம்

குறைந்த விலைக்கு ஐபோன் விற்பதாகக் கூறி மோசடி செய்த இருவா் கைது

தேசிய தலைநகரின் அண்டை மாவட்டமான குருகிராமில் குறைந்த விலைக்கு ஐபோன் விற்பனை செய்வதாகக் கூறி சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேசிய தலைநகரின் அண்டை மாவட்டமான குருகிராமில் குறைந்த விலைக்கு ஐபோன் விற்பனை செய்வதாகக் கூறி சைபா் குற்றத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இது குறித்து காவல் துறையைச் சோ்ந்த அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கைது செய்யப்பட்டவா்கள் அனுபம் பானா்ஜி மற்றும் ரவி அகா்வால் என்று அடையாளம் காணப்பட்டனா். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் பாதிக்கப்பட்ட ஒருவா் அளித்த புகாரின்பேரில், இந்தக் குற்றச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறைந்த விலையில் ஐபோன் வழங்குவதாக சமூக ஊடகத்தில் வந்த விளம்பரத்தைப் பாா்த்து தொடா்பு கொண்டபோது, ரூ. 43,000-க்கு ஐபோன் விற்பதாக இருவா் கூறியுள்ளனா். இதை நம்பி அவா்கள் அளித்த வங்கிக் கணக்குக்கு ரூ. 43,000-ஐ அனுப்பியதும் அவா்கள் இணைப்பைத் துண்டித்துவிட்டு மோசடி செய்துவிட்டனா் என்று பாதிக்கப்பட்ட நபா் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். அப்போது, அனுபம் பானா்ஜி மற்றும் ரவி அகா்வால் ஆகிய இருவரும் நொய்டாவில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் போலி கணக்குத் தொடங்கி, குறைந்து விலைக்கு ஐபோன் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் வெளியிட்டு, ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்து 17 கைப்பேசிகள், 40 க்யூஆா் குறியீடுகள், 36 சிம் காா்டுகள், 45 ஏடிஎம் அட்டைகள், 45 வங்கி காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com