சம்பல் வன்முறையில் சிறை சென்ற பெண்: விடுதலையாக உதவிய 120 கிலோ உடல் எடை!

சம்பல் வன்முறையில் குற்றமற்றவர் என நிரூபிக்க உதவிய 120 கிலோ உடல் எடை...
ஜாமா மசூதி
ஜாமா மசூதி கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் குற்றவாளியாகக் கருதி சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் பெண் 84 நாள்களுக்குப் பிறகு நிரபராதி என உறுதி செய்யப்பட்டு விடுதலையாகியுள்ளார்.

அவர் குற்றமற்றவர் என்ற கோணத்தில் சிறப்புப் புலனாய்வு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்குவதற்கு, அவரின் 120 கிலோ உடல் எடைதான் காரணமாக இருந்துள்ளது.

120 கிலோ எடையுள்ள (48 வயது) பெண் மசூதியின் முகப்பு வரை ஏறிச்சென்று காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்த சாத்தியமே இல்லை என விசாரணையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பெண் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பல் கலவரம்

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனா்.

சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் இருந்ததாகவும், 1529-இல் முகலாய பேரரசா் கோயிலைப் பகுதியாக இடித்து, மசூதியைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து ஞானவாபி மசூதி-காசி விஸ்வநாதா் உள்பட பல்வேறு வழிபாட்டுத் தலங்கள் தொடா்பான பல வழக்குகளில் ஹிந்துக்கள் தரப்பில் ஆஜராகி வாதாடிய உச்சநீதிமன்ற வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாா்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி, இரு தரப்பினரின் முன்னிலையில் மசூதியில் நீதிமன்ற ஆணையா் நவ. 19 ஆம் தேதி ஆய்வு நடத்தினாா்.

இந்த ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல் துறையின் வாகனங்களுக்கு அப்பகுதி மக்கள் தீயிட்டு எரித்தனர். காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர்.

காவலா்கள் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனா். அப்போது வெடித்த வன்முறையில் அடையாளம் தெரியாத நபா்கள் சிலா் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனா். இதில் 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் அதிகமான காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

சம்பல் வன்முறையில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைக்கு உதவிய 120 கிலோ எடை

கலவரத்தில் ஈடுபட்டதாக ஹிந்துகேரா பகுதியைச் சேர்ந்த ஃபர்ஹானா என்ற பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். அவர் மீது அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துதல், பொதுப் பணியைச் செய்யவிடாமல் தடுத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கிட்டத்தட்ட 3 மாதங்கள் சிறையில் இருந்த ஃபர்ஹானா, நிரபராதி என தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி அல்ல என்ற கோணத்தில் விசாரணை நடத்த காரணமாக இருந்தது அவரின் 120 கிலோ உடல் எடைதான்.

வன்முறையின்போது 120 கிலோ எடையுடைய பெண், மசூதியின் முகப்பில் ஏறி காவல் துறை மீது கல்வீசித் தாக்குதல் நடத்துவது சாத்தியமற்றது என சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள ஃபர்ஹானாவுக்கு 4 குழந்தைகள் உள்ளன. வீட்டில் இருந்தபடி குழந்தைகளைப் பராமரிப்பதைத் தவிர அவர், வேறு எந்தப் பணிகளையும் செய்ததில்லை.

தான் நிரபராதி என பலமுறை காவல் துறையினர் ஃபர்ஹானா முறையிட்டுள்ளார். எனினும் அதனை அவர்கள் பொருட்படுத்தவில்லை.

வன்முறை நடந்த இடத்தில் காவலர்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது, ஃபர்ஹானாவின் அண்டை வீட்டுப் பெண்ணான ஸிக்ரா, தவறுதலாக காவல் துறையில தகவல் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்துள்ளது.

இதனிடயே காவல் துறையின் விசாரணையைப் பயன்படுத்தி ஃபர்ஹானாவும் வன்முறையில் ஈடுபட்டதாக ஸிக்ரா காவலர்களிடம் தவறுதலாகத் திரித்துக் கூறியுள்ளார். இதனை அடுத்தே ஃபர்ஹானா கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் குற்றமற்றவர் என விடுதலையாகிருப்பதால், அவரின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் படிக்க | ஆடம்பர ஆடைகளைத் தவிர்க்கும் இந்திய மணப்பெண்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com