
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ்ரானா பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்திற்கு அருகில் ஒரு பரபரப்பான சாலையில் 20 வயது இளைஞர் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் விரட்டிச்சென்று சுட்டுக் கொன்றதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞர் ஹாதிபூரில் உள்ள சேத் காலனியைச் சேர்ந்த அமோக் சேத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அருகிலிருந்தோர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இளைஞர் உயிரிழந்தார்.
கும்பல் விரட்டிச்சென்றபோது இளைஞர் கடையொன்றில் தஞ்சமடைந்தபோது தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் புத்தகக் கடை ஊழியர் ஆதித்யா காஷ்யப் என்பவரும் காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
திங்கள்கிழமை மாலை நடந்த இந்த சம்பவத்திற்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர்கள் இரண்டு இருசக்கர வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.
ஹோலி பண்டிகைக்கு முன்னதாக சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்வதற்காக நேற்று நகரத்தில் ரோந்து சென்றபோது இந்த சம்பவம் நடைபெற்றது.
முதற்கட்ட விசாரணையில் இறந்த இளைஞருக்கும் அன்மோல் புரி பாலா என்ற மற்றொரு இளைஞருக்குத் தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இறந்த இளைஞரின் தந்தை பாரத் சேத் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருவதாகவும், முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர் விரைவில் கைது செய்யப்படுவர் என்று கெரி காவல் கண்காணிப்பாளர் சங்கல்ப் சர்மா தெரிவித்தார்.