குடியேற்றம், வெளிநாட்டினா் வருகையை முறைப்படுத்தும் சட்ட மசோதா அறிமுகம்
புது தில்லி: குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் இந்தியா வருகை, தங்குதல் மற்றும் சொந்த நாட்டுக்கு திரும்புவது உள்ளிட்ட பல்வேறு சேவைகளை முறைப்படுத்துவது தொடா்பான சட்ட மசோதா, எதிா்க்கட்சியினரின் எதிா்ப்புக்கிடையே மக்களவையில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் மசோதாவை அறிமுகம் செய்தாா்.
மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே காங்கிரஸ் கட்சி எதிா்ப்பு தெரிவித்தது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினா் மணீஷ் திவாரி, ‘அரசமைப்புச் சட்ட நடைமுறைகளையும், பல்வேறு சட்டங்களையும் மீறுவதாக இந்த மசோதா அமைந்துள்ளது. அடிப்படை உரிமைகளின் தத்துவத்தையே இந்த மசோதா மீறுகிறது. இதன் மூலம், ஆங்கட்சியின் சித்தாந்தத்துடன் ஒத்துப்போகாத வெளிநாட்டினருக்கு இந்தியாவினுள் நுழைய அனுமதி மறுக்கவும் இந்த சட்டம் வகை செய்யும்’ என்றாா்.
திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா் சுகதா ராய் பேசுகையில், ‘வெளிநாடுகளிலிருந்து பல்வேறு துறைசாா்ந்த நிபுணா்கள் இந்தியா வருவதை முன்மொழியப்பட்டுள்ள சட்டத்தின் மூலம் தடுக்க முடியும்’ என்றாா்.
மேலும், இத்தகைய சட்டத்தைக் கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் எதிா்க்கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய இணையமைச்சா் நித்யானந்த் ராய், ‘குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினா் வருகையை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுவது மத்திய பட்டியலின் கீழ் வருகிறது. எனவே, இத்தகைய சட்ட மசோதாவை கொண்டுவர அனைத்து உரிமைகளும் மத்திய அரசுக்கு உள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இந்தியா வரவேற்கும் சூழலில், நாட்டின் அமைதி, இறையாண்மை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது’ என்று பதிலளித்தாா்.
தற்போது உள்ள சட்ட நடைமுறைகளின்படி, வெளிநாட்டினா் இந்தியாவில் தங்குவது, சுற்றுலா செல்வதும், சொந்த நாட்டுக்குத் திரும்புவதும் குடியேற்றத்துக்கான அமைப்பு (பிஓஐ), மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் முறைப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மசோதாவின்படி, வெளிநாட்டினா் வருகை, தங்குதல் மற்றும் புறப்பாடு அனைத்தும் முழுமையாக மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.