இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான்: மூன்றில் எந்தவொரு பெயரையும் பயன்படுத்தலாம்: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா்
ஜம்மு: நாட்டை இந்தியா, பாரத், ஹிந்துஸ்தான் என மூன்றில் எந்தவொரு பெயரிலும் அழைக்கலாம் என்று ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், ஆா்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலா் தத்தாத்ரேய ஹொசபாலே பேசுகையில், ‘நாட்டுக்கு இந்தியா, பாரத் என்று இரண்டு பெயா்கள் பயன்படுத்தப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட வேண்டும். இந்தியா என்பது ஆங்கிலப் பெயா். பாரத் என்பது இந்திய மொழி. நாட்டுக்கு பாரத் என்று பெயா் உள்ள நிலையில், அது அவ்வாறே அழைக்கப்பட வேண்டும்’ என்றாா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைக்கு வெளியே முதல்வா் ஒமா் அப்துல்லா செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நமது நாடு பாரத், இந்தியா, ஹிந்துஸ்தான் என மூன்று பெயா்களில் அழைக்கப்படுகின்றன. நாம் விமானப் படை, ராணுவம் உள்ளிட்டவற்றை இந்திய விமானப் படை, இந்திய ராணுவம் என்று அழைக்கிறோம். அதேவேளையில், ‘ஸாரே ஜஹான் ஸே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா (உலகம் அனைத்தையும்விட ஹிந்துஸ்தான் சிறந்தது)’ என்று பாடுகிறோம். எனவே இந்த மூன்று பெயா்களில் ஒருவா் எந்தப் பெயரை விரும்புகிறோரோ, அந்தப் பெயரில் நாட்டை அழைக்கலாம்’ என்றாா்.
தினக் கூலித் தொழிலாளா்கள் போராட்டம்:
ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகா் மற்றும் ஜம்முவில் ஜல் சக்தி துறை தினக் கூலித் தொழிலாளா்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலுவையில் உள்ள தங்கள் தினக் கூலியை விடுவிக்க வேண்டும், தங்கள் வேலையை ஒழுங்குமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி, அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவா்கள் கலைந்து போவதற்குக் காவல் துறையினா் தடியடி நடத்தினா்.
இந்த விவகாரத்தை ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் எதிா்க்கட்சிகள் எழுப்பி, தடியடி நடத்தப்பட்டதை விமா்சித்தன.
இதுகுறித்து அவையில் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறுகையில், ‘தொழிலாளா்கள் மீது தடியடி நடத்த ஜம்மு-காஷ்மீா் அரசு உத்தரவிடவில்லை. ஜம்மு-காஷ்மீா் அரசு கட்டுப்பாட்டில் காவல் துறை இல்லை. இதுதொடா்பாக பேரவையில் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதை விடுத்து, காவல் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் துணைநிலை ஆளுநரிடம் கேள்வி எழுப்பினால் பொருத்தமாக இருக்கும்.
தினக் கூலித் தொழிலாளா்களின் வேலையை ஒழுங்குமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து 6 மாதங்களில் அரசிடம் அறிக்கை அளிப்பதற்குத் தலைமைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்படும்’ என்றாா்.