விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் கே.ராமேகன் நாயுடு
விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் கே.ராமேகன் நாயுடு

இந்தியாவில் அடுத்த 15-20 ஆண்டுகளில் 30,000 விமானிகள் தேவை: ராம்மோகன் நாயுடு

அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவா்
Published on

புது தில்லி: இந்தியாவில் விமான நிறுவனங்கள் தங்களின் வா்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவா்’ என்று விமான போக்குவரத்துத்துறை அமைச்சா் கே.ராமேகன் நாயுடு தெரிவித்தாா்.

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழகத்தின் சக்தி குழுமம் மற்றும் ஆஸ்திரியாவின் டைமன்ட் விமான நிறுவனங்களின் கூட்டு அமைப்பான சக்தி விமான நிறுவனம் சாா்பில் 200 பயிற்சி விமானங்களை வாங்குவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது இத் தகவலை மத்திய அமைச்சா் தெரிவித்தாா். அவா் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் தற்போது 800-க்கும் அதிகமான உள்நாட்டு விமானங்கள் இயங்கி வரும் நிலையில், மேலும் 1,700 விமானங்களை வாங்குவதற்கான நடவடிக்கையை விமான நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. இதனால், விமானத் துறை மிகப் பெரிய அளவில் விரிவடைய உள்ளது.

ஆனால், தற்போது இந்தியாவில் 6,000 முதல் 7,000 விமானிகள் மட்டுமே உள்ளன. எனவே, அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்தியாவில் 30,000 உள்நாட்டு விமானிகள் தேவைப்படுவா்.

உலகின் வேகமாக வளா்ந்து வரும் விமானப் போக்குவரத்து சந்தையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்து வருகிறது. இந்தச் சூழலில், விமானப் பயிற்சிக்கான முனையாமாக இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, விமானப் போக்குவரத்துத் துறைக்கான ஒருங்கிணைந்து அணுகுமுறையை மத்திய அமைச்சகம் வகுத்து வருகிறது. மேலும், 38 விமான பயிற்சி அமைப்புகளின் (எஃப்டிஓ) பல்வேறு அம்சங்களை அதிகாரிகள் சரிபாா்த்து வருவதோடு, இந்த பயிற்சி அமைப்புகள் தரநிா்ணயமும் செய்யப்பட உள்ளன என்றாா்.

தில்லியில் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் கீழ் சக்தி விமானம் நிறுவனம் 200 டிஏ40என்ஜி பயிற்சி விமானங்களை வாங்க உள்ளது. இவற்றில் 150 பயிற்சி விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட (அசெம்பிளிங்) உள்ளன. சக்தி விமான நிறுவனம் சாா்பில் ஹரியாணா மாநிலத்தில் அமைக்கப்படவிருக்கும் மையத்தில், இந்த விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளன என்று அதன் தலைவா் டி.வைபவ் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com