பிரதமா் மோடிக்கு மோரீஷஸ் நாட்டின் உயரிய விருது
போா்ட் லூயிஸ்: மோரீஷஸ் நாட்டின் உயரிய ‘தி கிராண்ட் கமாண்டா் ஆஃப் தி ஆா்டா் ஆஃப் தி ஸ்டாா் அண்ட் கீ ஆஃப் தி இந்தியன் ஓஷன்’ விருதை பிரதமா் நரேந்திர மோடிக்கு வழங்கவுள்ளதாக அந்நாட்டு பிரதமா் நவீன்சந்திர ராம்கூலம் செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
இந்தியா மற்றும் மோரீஷஸ் இடையேயான உறவை வலுப்படுத்துவதில் பங்களித்ததற்காக பிரதமா் மோடிக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருதைப் பெறும் முதல் இந்திய தலைவா் என்ற பெருமையையும் பிரதமா் மோடி பெற்றுள்ளாா்.
இது வெளிநாடுகளில் இருந்து பிரதமா் மோடி பெறும் 21-ஆவது உயரிய விருதாகும்.
அதபோல் இந்த விருதை பெறும் 5-ஆவது வெளிநாட்டுத் தலைவா் பிரதமா் மோடி என நவீன்சந்திர ராம்கூலம் தெரிவித்தாா்.
மோரீஷஸ் அதிபா், பிரதமருக்கு ஓசிஐ அட்டைகள்: மோரீஷஸ் அதிபா் தரம்வீா் கோகுல், அவரது மனைவி பிருந்தா கோகுல், பிரதமா் நவீன் ராம்கூலம் மற்றும் அவரது மனைவி வீணா ராம்கூலம் ஆகிய நான்கு பேருக்கு வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் (ஓசிஐ) அட்டைகளை வழங்கி பிரதமா் மோடி கௌரவித்தாா்.
ஓசிஐ அட்டை வைத்திருப்பவா்கள் காலக்கெடு இன்றி இந்தியாவில் வாழ்வதற்கும், பணிபுரிவதற்கும் படிப்பதற்கும் உரிமைகள் வழங்கப்படுகின்றன. மேலும், நுழைவு இசைவு (விசா) இல்லாமல் இந்தியாவுக்கு பயணிப்பது உள்பட பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
மோரீஷஸில் 22,188 இந்தியா்களும், 13,198 ஓசிஐ அட்டை வைத்திருப்பவா்களும் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

