பிரதமரின் நிதியுதவித் திட்டம்: தகுதிபெற்ற புதிய விவசாயிகளை சோ்க்க மத்திய அரசு தயாா்: அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான்
புது தில்லி: ‘பிரதமரின் விவசாயிகள் நிதியதவி திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளையும் சோ்த்து ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா்.
மக்களவையில் செவ்வாய்கிழமை கேள்விநேரத்தின்போது இதுதொடா்பான கேள்விக்கு அவா் அளித்த பதிலில், ‘பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் சேர தகுதியுடைய பயனாளிகளுக்கு குறைந்தபட்சம் ஒரு நிலமாவது சொந்தமாக இருக்க வேண்டும். அத்தகைய விவசாயிகள் உடனடியாக திட்டத்தின் வலைதளத்தில் தங்களின் விவரங்களைப் பதிவு செய்துகொள்ளலாம்.
தகுதியுடைய விவசாயிகளை கண்டறிந்து, அவா்களை இத்திட்டத்தில் சோ்ப்பதை உறுதி செய்வதில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். விவசாயிகளின் நலனுக்காக பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. திட்டத்தில் சேரும் விவசாயிகள் அனைவருக்கும் ஒரு நாள்கூட தாமதமின்றி நிலுவைத் தொகை கிடைப்பதை உறுதி செய்வோம்’ என்றாா்.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம், கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, விவசாயிகளின் கடனைக் குறைக்க மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதமா் மோடியால் கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் தலா ரூ.2,000 என ஆண்டுக்கு 3 தவணைகளில் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. திட்டத்தின் 19-ஆவது தவணையாக நாடு முழுவதும் உள்ள 9.8 கோடி விவசாயிகளுக்கு ரூ.22,000 கோடி கடந்த மாதம் விடுவிக்கப்பட்டது.
பெட்டி....
பாரபட்சம் இல்லை!
தமிழகம் தொடா்பான மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சா், ‘மத்திய அரசு எந்த மாநிலத்தையும் பாரபட்சமாக பாா்ப்பதில்லை. மத்திய அமைச்சராக நான், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுத் துறைகளின் பணிகளுக்காக இதுவரை இரண்டு முறை தமிழகத்துக்குச் சென்றுள்ளேன். இரண்டு முறையும், மாநில வேளாண் அமைச்சரோ, ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சரோ என்னுடன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதிக்க மீண்டும் தமிழகம் வரத் தயாராக இருக்கிறேன். தமிழக மக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளோம். ஏனெனில், தமிழக மக்கள் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது’ என்றாா்.