நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!

22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை செளந்தர்யா மரணத்தில் சந்தேகம் என வழக்கு...
நடிகை செளந்தர்யா மரணம் விபத்தல்ல, திட்டமிட்ட கொலை: மோகன் பாபு மீது புகார்!
Published on
Updated on
1 min read

நடிகை செளந்தர்யா சென்ற விமானம் வெடித்தது விபத்தல்ல, திட்டமிட்ட கொலையாக இருக்கக்கூடும் என்று கம்மம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மேலும், செளந்தர்யா விமானம் வெடித்த சம்பவத்தில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

செளந்தர்யா மரணம்

1990-களில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் நடிகை செளந்தர்யா. தமிழில் படையப்பா, அண்ணாமலை, காதலா காதலா, சொக்கத்தக்கம் உள்ளிட்ட ஹிட் படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

கடந்த 2004ஆம் ஆண்டு, இவர் தேர்தல் பிரசாரத்துக்காக பெங்களூருவில் இருந்து கரீம் நகருக்கு சிறிய ரக விமானம் மூலம் புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் வெடித்துச் சிதறியதில் செளந்தர்யா பலியானார்.

அப்போது செளந்தர்யா கர்ப்பமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அவரின் உடல் பாகங்கள் எவ்வளவு தேடியும் வெடித்துச் சிதறிய இடத்தில் கிடைக்கவில்லை.

இந்த விபத்தில், செளந்தர்யாவுடன் பயணித்த அவரது சகோதரர் அமர்நாத்தும் உயிரிழந்தார்.

மோகன் பாபுவுக்கு தொடர்பு?

செளந்தர்யா உயிரிழந்து 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அவரின் விமானம் விபத்தால் வெடிக்கவில்லை, திட்டமிடப்பட்ட கொலை என்று சமூக ஆர்வலர் சிட்டிமல்லு என்பவர் கம்மம் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், ”ஷம்ஷாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் செளந்தர்யாவுக்குச் சொந்தமான 6 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை மோகன் பாபு கேட்ட நிலையில், செளந்தர்யாவும் அவரது சகோதரரும் கொடுக்க மறுத்துவிட்டனர். தற்போது அந்த நிலத்தை மோகன் பாபு ஆக்கிரமித்துள்ளார்.

செளந்தர்யா சென்ற விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதில் சதித்திட்டம் இருக்கிறதா? மோகன் பாபுவுக்கு தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் பாபு மீதான சமூக ஆர்வலரின் குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தில் இதுவரை முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com