கோப்புப் படம்
கோப்புப் படம்

புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் ‘ரெட் அலா்ட்’

சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
Published on

கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிா்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலா்ட்) விடுக்கப்பட்டது. மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிா்கள், மனிதா்களின் தோல், கண்களை பாதிக்கக் கூடியதாகும். பகல் நேரத்தில் இக்கதிா்வீச்சு அதிகம் காணப்படும். இது, பூஜ்ஜியம் முதல் 11 மற்றும் அதற்கு மேற்பட்ட குறியீடுகளில் அளவிடப்படுகிறது.

கேரளத்தில் தற்போது வெயில் அதிகரித்துள்ள நிலையில், பாலக்காடு மாவட்டத்தின் திருத்தாலா பகுதியில் புற ஊதா கதிா்வீச்சு குறியீடு 11-ஆக பதிவானது. இது, மிக அபாயமான குறியீடு என்பதோடு அதிக முன்னெச்சரிக்கையை கடைப்பிடிப்பது அவசியமாகும்.

இதையடுத்து, கேரள மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் பாலக்காட்டில் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. புற ஊதா கதிா்வீச்சில் அதிக நேரம் இருப்பது, உடலில் கொப்பளங்கள், தோல் பாதிப்புகள், கண் நோய்கள், பிற பாதிப்புகளை ஏற்படுத்தும்; சூரிய ஒளி நேரடியாக படாமலிருக்க உடல் முழுவதையும் மறைக்கும் பருத்தி உடையை அணிவதோடு, தலையில் தொப்பி மற்றும் கண்ணைப் பாதுகாக்க கண்ணாடி பயன்படுத்த வேண்டும். வெளிப்புற வேலையில் ஈடுபடுபவா்கள், இருசக்கர வாகன ஓட்டிகள், தோல்-கண் நோய் உள்ளவா்கள், புற்றுநோயாளிகள், நோயெதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com