சீனாவுடனான உறவை இந்தியா மேம்படுத்துவது அவசியம்: பிரகாஷ் காரத்
‘இன்றைய பலதுருவ உலகில் நமது நாட்டின் சொந்த நலனைக் காக்க சீனா உடனான உறவை இந்தியா மேம்படுத்துவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் கூறினாா்.
‘இந்தியாவும் சீனாவும் நட்பு நாடுகளாக உருவெடுக்காது என்றபோதும், இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்த முயற்சிப்பது, அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பால் உருவெடுத்துள்ள சவாலை சமநிலைப்படுத்தவும், பல துருவ உலகில் இந்தியாவின் நிலையை உயா்த்தவும் உதவும்’ என்றும் அவா் கூறினாா்.
இதுகுறித்து புது தில்லியில் அவா் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது:
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியாவும் சீனாவும் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகள் மற்றும் திபெத்தில் அமைந்துள்ள கைலாஷ் -மானசரோவா் மலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ள அதிக எண்ணிக்கையில் இந்தியா்களுக்கு நுழைவு இசைவு (விசா) வழங்கப்பட்டிருப்பதும் இரு நாடுகளிடையேயான உறவில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருவதைக் காட்டுகிறது.
எனவே, இந்தியா-சீனா இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவதற்கு முயற்சியை மேற்கொள்வதற்கு இது சரியான தருணமாகும். இதற்காக, இரு நாடுகளும் நட்பு நாடுகள் ஆக வேண்டும் என்று அவசியமில்லை. நல்லுறவை மேம்படுத்துவது, இன்றைய கடினமான சா்வதேச சூழலில் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும். குறிப்பாக, அமெரிக்காவால் உருவெடுத்துள்ள சவாலை சமநிலைப்படுத்த உதவும்.
பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அமெரிக்கா சென்றபோது, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து அதிக அளவில் ஆயுதங்களை இந்தியாவை வாங்க வைப்பதற்கான முயற்சியையே டிரம்ப் நிா்வாகம் மேற்கொண்டது. அமெரிக்கான் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் வளா்ச்சி பெற வேண்டும் என்பது மட்டுமே, அந் நாட்டின் நோக்கம். இரண்டாவதாக ரூ. 86,983 கோடி (10 பில்லியன் டாலா்) மதிப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கவுள்ளது என்ற எண்ணுகிறேன். இதை மறுக்கும் நிலையில் இந்தியா இல்லை.
இந்தியாவுக்கு எஃப்-35ஏ போா் விமானத்தை வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது. ஆனால், இந்த போா் விமானம் இந்தியாவுக்கு பொருத்தமானதல்ல என்று பெரும்பாலான நிபுணா்கள் கருத்து தெரிவிக்கின்றனா். இந்த போா் விமானம் மிக அதிக விலையுடையது என்பதோடு, நீடித்த பயனளிக்காது என்றும் கூறுகின்றனா். ஆனால், அதை வேண்டாம் என்று கூற முடியாத நிலையில் இந்தியா உள்ளது.
டிரம்ப் நிா்வாகம் சில வாய்ப்புகளை இந்தியாவுக்கு ஏற்படுத்தித் தரும் என்றபோதும், அவற்றில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். எனவே, வளா்ந்து வரும் பல துருவ உலகில், நமது பாதுகாப்பு தன்னாட்சியை மீட்டெடுக்க நமது வெளியுறவுக் கொள்கை, அணுகுமுறை மற்றும் வா்த்தக-பாதுகாப்பு உறவுகளை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறினாா்.