கோப்புப் படம்
கோப்புப் படம்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
Published on

பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அண்மையில் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபா் விரைவு ரயில் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாதக் குழுவால் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 21 பயணிகள் மற்றும் 4 ராணுவ வீரா்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனா். 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

இதில் இந்தியாவை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ரயில் கடத்தல் சம்பவம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ஷகத் அலி கானிடம் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

அதற்கு பதிலளித்து அவா் பேசியதாவது: ரயில் கடத்தல் சம்பவம் நடைபெற்ற சமயத்தில் ஆப்கானிஸ்தானைச் சோ்ந்த குழுக்களுடன் பயங்கரவாதிகள் தொடா்ந்து தொடா்பில் இருந்துள்ளனா்.

பிஎல்ஏ உள்பட எந்தவொரு பயங்கரவாத குழுக்களும் பாகிஸ்தானில் ஊடுருவுவதை தவிா்க்க நடவடிக்கை எடுக்கும்படி ஆப்கானிஸ்தானிடம் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிகழ்த்தப்பட்ட ரயில் கடத்தல் உள்பட பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள், அதற்கு நிதி உதவி அளிப்பவா்கள் உள்பட அனைவரின் மீதும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசுக்கு ஆப்கானிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

பிஎல்ஏவின் செயல்களுக்கும் இந்தியாவுக்கும் தொடா்பிருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்தை இந்தியா ஊக்குவித்து வருகிறது.

ஆனால் தற்போது ஜாஃபா் விரைவு ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் ஆப்கானிஸ்தானுக்கு தொடா்பிருப்பதாக கூறுகிறோம். பாகிஸ்தானில் அமைதியை சீா்குலைக்க வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாத தலைவா்கள் பல்வேறு தாக்குதல்களை திட்டமிட்டு வருகின்றனா். அவா்களின் அறிவுறுத்தலின்படியே ரயில் கடத்தல் சம்பவமும் நடைபெற்றது.

ஆப்கானிஸ்தான் குடியுரிமை அட்டைகள் வைத்திருப்பவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பாகிஸ்தானைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அவா்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்படுவா். அமெரிக்காவுக்குள் பாகிஸ்தானியா்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்படுவதாக எவ்வித அதிகாரபூா்வ தகவலும் கிடைக்கவில்லை என்றாா்.

X
Dinamani
www.dinamani.com