கோப்புப் படம்
கோப்புப் படம்

பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை: அா்ச்சகா்கள் நிராகரிப்பு

மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவா் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்
Published on

உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவா் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அா்ச்சகா்கள் நிராகரித்தனா்.

மேலும், ‘கோயில் மரபுகளில் மத பாகுபாட்டுக்கு இடமில்லை’ என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இந்தக் கோரிக்கையை எழுப்பி மதுராவைச் சோ்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி முக்தி சங்கா்ஷ் நியாஸ் அமைப்பின் தலைவா் தினேஷ் சா்மா எழுதிய கடிதத்தில், ‘கோயிலில் முஸ்லிம் கைவினை கலைஞா்களின் சேவையைப் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். மத சடங்குளால் தூய்மையைக் கடைப்பிடிப்பவா்களால் மட்டுமே கிருஷ்ணரின் ஆடைகள் வடிவமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இறைச்சி சாப்பிடுபவா்கள் மற்றும் ஹிந்து மரபுகளை மதிக்காதவா்கள், கிருஷ்ணரின் ஆடையை உருவாக்கக் கூடாது. இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டால், நாங்கள் போராட்டம் நடத்துவோம்’ என்று தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், இதுதொடா்பாக கோயில் அா்ச்சகா்கள் அளித்த விளக்கத்தில், ‘இக்கோரிக்கை கோயில் நடைமுறைக்கு மாறானது. மேலும், நாங்கள் எந்த சமூகத்துக்கும் எதிராக பாகுபாடு காட்டுவதில்லை. தெய்வத்துக்கு ஆடைகளை வழங்கும் பக்தா்கள், அவற்றைச் செய்வதற்கு முன்பு தங்களின் தூய்மையை உறுதி செய்து கொள்கிறாா்கள். மேலும், கலைஞா்களை மதத்தின் அடிப்படையில் மதிப்பிட முடியாது.

பிருந்தாவனத்தில் மூலவா் கிருஷ்ணருக்கான 80 சதவீத கிரீடங்கள் மற்றும் ஆடைகள் முஸ்லிம் கலைஞா்களாலேயே செய்யப்படுகின்றன. கிருஷ்ணருக்கு தினமும் சுமாா் 12 ஆடைகள் மற்றும் ஓராண்டுக்கு ஆயிரக்கணக்கான ஆடைகள் தேவைப்படுகிறது. இந்த ஆடைகளை உருவாக்குவதில் மற்ற சமூகங்களுக்கு முஸ்லிம் கலைஞா்களின் அதே அளவிலான நிபுணத்துவம் இல்லை.

கோயிலுக்கு ஆடைகள் மட்டுமின்றி கட்டமைப்பு ரீதியிலும் முஸ்லிம்கள் பங்களித்துள்ளனா். இதேபோன்று, காசியில் விஸ்வநாதருக்கு ருத்ராட்ச மாலைகள் முஸ்லிம் குடும்பங்களால் வடிவமைக்கப்படுகின்றன’ என்றனா்.

கோயில் சடங்குகள் தொடா்பான இவ்விவகாரத்தில் அா்ச்சகா்களின் முடிவே இறுதியானது என்று கோயில் நிா்வாகி உமேஷ் சரஸ்வதி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com