தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கை (2020) ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை - பவன் கல்யாண்
தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்
Published on
Updated on
2 min read

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் மாநிலங்கள் அனைத்திலும் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு அலை பலமாகக் கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், “வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்யும்போது, ஹிந்தியை எதிர்ப்பது ஏன்?” என்று ஆந்திர துணை முதல்வரும் தெலுங்கு நடிகருமான பவன் கல்யாண் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

தெலுங்கில் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் இளைய சகோதரருமான ஜன சேனை அரசியல் கட்சித் தலைவருமான பவன் கல்யாண், அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் பாஜக மற்றும் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி அமைத்து ஆளும் கூட்டணி ஆட்சியில் துணை முதல்வராக பதவி வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஹிந்தி சர்ச்சைக்குள்ளான விவகாரத்தில் தமது ஜன சேனை கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். ஹிந்தி திணிப்பு, தேசியக் கல்விக் கொள்கை குறித்து பவன் கல்யாண் தமிழில் தமது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் இன்று(மார்ச் 15) பதிவிட்டுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது : ஒரு மொழியை கட்டாயமாக திணிப்பதும், ஒரு மொழியை கண்மூடித்தனமாக எதிர்ப்பதும், இவை இரண்டுமே இந்தியாவின் தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்தவை அல்ல. நான் ஹிந்தியை ஒரு மொழியாக ஒருபோதும் எதிர்க்கவில்லை.

ஆனால், அதை கட்டாயமாக்குவதற்காக முன்பு எடுக்கப்பட்ட முயற்சிக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தேன்.

தேசியக் கல்விக் கொள்கை 2020 - ஹிந்தியை எந்த வகையிலும் கட்டாயமாக்கவில்லை என்கிற நிலையில், அதைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புவது அரசியல் நோக்கத்திற்காக மக்களை தவறாக வழிநடத்தும் தந்திரம் மட்டுமே.

தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் தங்கள் தாய்மொழியுடன் சேர்த்து எந்த இரண்டு இந்திய மொழிகளையும் (அவை ஹிந்தியாக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை) மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியையும் தேர்வு செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர். அவர்கள் ஹிந்தியை படிக்க விரும்பவில்லை என்றால், அதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், மராத்தி, சமஸ்கிருதம், குஜராத்தி, அஸ்ஸாமி, காஷ்மிரி, ஓடியா, வங்காள மொழி, பஞ்சாபி, சிந்தி, போடோ, டோகரி, கொங்கணி, மைதிலி, மணிப்பூரி மொழி, நேபாளி, சந்தாலி, உருது உள்ளிட்ட எந்த இந்திய மொழிகளையும் தேர்வு செய்யலாம்.

பன்மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வையும், கல்விச் சுதந்தரத்தையும் வழங்குகிறது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் மொழிப் பன்மையை பாதுகாக்கும் நோக்கிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை தவறாக விளக்கி, அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவது, அல்லது பவன் கல்யாண் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளார் எனத் தவறாக கூறுவது, மொழிக் கொள்கையைப் பற்றிய புரிதலின்மையையே காட்டுகிறது.

ஜன சேனை கட்சி மொழித் தேர்வுச் சுதந்திரமும், கல்விச் சுதந்தரமும் ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது என்பதில் உறுதியாக உள்ளது.

இவ்வாறு பவன் கல்யாண் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஹிந்தி குறித்த பவன் கல்யாணின் கருத்துகளுக்கு திமுக எதிர்வினையாற்றியுள்ளது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com