ஹைதராபாத்தில் மொபைல் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் சமூக வலைதளப் பிரபலங்கள் பணத்திற்காக பொருள்கள், உணவுகள் போன்ற பலவற்றை விளம்பரம் செய்து வருகின்றனர். இதனால், பலரும் கணிசமாக சம்பாதிக்கும் அதே வேளையில் தவறானவற்றை விளம்பரம் செய்வதால் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.
ஹைதராபாத் அருகேயுள்ள மியாபூர் பகுதியைச் சேர்ந்த வினய் வங்கலா என்ற நபர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கொடுத்த புகாரின் பேரில் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்திய சமூக வலைதளப் பிரபலங்கள் 11 பேர் மீது பஞ்சகுட்டா பகுதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொழில் வளர்ச்சித் தொடர்பான பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்ட அவர் அங்கிருந்த பெரும்பாலான மாணவர்கள் சூதாட்ட செயலிகள் பற்றி விவாதிப்பதைக் கவனித்துள்ளார்.
மேலும், சூதாட்டத்தை ஊக்குவிக்கும் பல சூதாட்ட செயலிகள் மற்றும் வலைதளங்கள் தன்னைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுவதையும் அறிந்தார்.
இது தொடர்பாக தனது புகாரில் குறிப்பிட்ட அவர், “பொது சூதாட்டச் சட்டம் 1867-ன் கீழ் இந்தச் செயலிகள் மற்றும் வலைதளங்கள் சூதாட்ட சட்ட விதிமுறைகளை நேரடியாக மீறுகின்றன. மேலும், நானும் ஒருமுறை சூதாட்ட செயலி ஒன்றைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, இதுபற்றி விளம்பரப்படுத்தும் நபர்கள் மீது புகாரளித்தேன்” என்று தெரிவித்தார்.
அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதுகுறித்துப் பேசிய காவல்துறையினர், “சூதாட்ட செயலிகள் மூலம் எளிதாக பணம் வெல்ல முடியும் என்று இளைஞர்களையும் பொதுமக்களையும் நம்ப வைத்து, இந்த செயலிகள் அவர்களை குறிவைக்கின்றன. எனவே, அதனை விளம்பரப்படுத்திய நபர்கள் மீது சம்பந்தப்பட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது” என தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் யூடியுப், இன்ஸ்டாகிராம், சின்னத் திரை பிரபலங்கள் என்று போலீஸ் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.