ஒளரங்கசீப் விவகாரம்: நாக்பூரில் வன்முறை! 9 பேர் படுகாயம்; 15 பேர் கைது!

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம்.
கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை
கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறைPTI
Published on
Updated on
1 min read

ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் நாக்பூரில் பதற்றம் நிலவிவருகிறது.

விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்த போராட்டத்தில் புனித நூல் தீயிட்டு எரிக்கப்பட்டதாக பரவிய தகவலைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

இந்த வன்முறையில் 9 பேர் படுகாயம் அடைந்த நிலையில், 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நாக்பூர் காவல் துறை தெரிவித்துள்ளது.

முகலாய மன்னரான ஒளரங்கசீப், தனது கடைசி காலத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வாழ்ந்து மறைந்தார்.

அவரது உடல் சாம்பாஜி நகர் மாவட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டு, கல்லறை எழுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்பது வலதுசாரி அமைப்பினர் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இதனிடையே ஒளரங்கசீப் ஒரு சிறந்த நிர்வாகி என்றும், பல கோயில்களை அவர் கட்டியுள்ளதாகவும், வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் சமாஜவாதி கட்சியின் மகாராஷ்டிர மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி தெரிவித்த கருத்துக்கு மகாராஷ்டிரத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்தது. அபு ஆஸ்மிக்கு எதிராக காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகளும் பதியப்பட்டன.

இதன் விளைவாக ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவடைந்தது. குறிப்பாக, ஒளரங்கசீப் கல்லறையை அகற்றவில்லை என்றால் பாபர் மசூதிக்கு நேர்ந்த நிலை ஏற்படும் என்று இந்து அமைப்பினர் மிரட்டல் விடுத்தது பெரும் சர்ச்சையானது.

ஒளரங்கசீப் கல்லறையை அகற்றக் கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் எரிக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதனால் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதால், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

கல் வீச்சில் பலர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து விரைந்த கூடுதல் காவல் படையினர், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

நாக்பூரில் மற்றொரு இடத்திலும் வன்முறை வெடித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையை அடக்குவதற்குள் நாக்பூரின் ஹன்ஸாபூரி பகுதியிலும் கலவரம் மூண்டது. முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர்கள், வாகனங்களுக்கு தீயிட்டு கொளுத்தி, கடைகளை அடித்து உடைத்தனர்.

வன்முறை தூண்டியவர்கள் மீது நடவடிக்கை

அனைவரும் அமைதி காக்குமாறு அறிவுறுத்தியுள்ள மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவீஸ், வன்முறையைத் தூண்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

பாஜகவின் மத அரசியலால், நாக்பூர் பதற்றம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com