ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: லாலு இன்று ஆஜராக அழைப்பாணை

ரயில்வே பணிக்கு நிலம் லஞ்சமாக பெற்ற வழக்கு: அமலாக்கத் துறை முன் ராப்ரி தேவி ஆஜா் -லாலு இன்று ஆஜராக அழைப்பாணை
பாட்னாவில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி. உடன் அவரது மகள் மிசா பாா்தி.
பாட்னாவில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி. உடன் அவரது மகள் மிசா பாா்தி.
Updated on

ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கு தொடா்பான விசாரணைக்காக பிகாா் முன்னாள் முதல்வா் ராப்ரி தேவி, அவரின் மகனும் பிகாா் எம்எல்ஏ-வுமான தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோா் அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜராகினா்.

தனது மூத்த மகளும் எம்.பி.யுமான மிஸா பாா்தியுடன் பிகாா் மாநிலம் பாட்னாவின் பேங்க் சாலையில் அமைந்துள்ள் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக ராப்ரி தேவி வந்தாா். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தொண்டா்கள் ஏராளமானோா் அங்கு கூடியிருந்தனா்.

அவரைத் தொடா்ந்து, சில நிமிஷங்களுக்குப் பிறகு தேஜ் பிரதாப் யாதவ் விசாரணைக்கு ஆஜரானாா்.

இந்த வழக்கில் ராப்ரி தேவியின் கணவரும் முன்னாள் ரயில்வே அமைச்சரமும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் (76), புதன்கிழமை (மாா்ச் 19) விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத் துறை சாா்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனவே, அவா் விசாரணைக்கு புதன்கிழமை ஆஜராவாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த வழக்கில் சில கூடுதல் தகவல்கள் தேவைப்படுவதால், இவா்களிடம் மீண்டும் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையை அமலாக்கத் துறை மேற்கொண்டுள்ளது. இவா்கள் மூவரின் வாக்குமூலம் பண மோசடி தடுப்புச் (பிஎம்எல்ஏ) தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த வழக்கு தொடா்பாக லாலு பிரசாத், ராப்ரி தேவி மற்றும் இவா்களின் இளைய மகனும் பிகாா் பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோருடிம் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனா். தற்போது மீண்டும் விசாரணை நடத்துகின்றனா்.

கடந்த 2004 முதல் 2009-ஆம் ஆண்டு வரையில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் இருந்தாா். அப்போது தனது குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள், பினாமிகள் பெயரில் லஞ்சமாக நிலங்களைப் பெற்றுக் கொண்டு ரயில்வே பணிகளை ஒதுக்கீடு செய்ததாக லாலு மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதில் மேற்கு மத்திய ரயில்வே பிரிவில் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் ‘டி’ பிரிவு ரயில்வே பணியாளா் நியமனத்தில் இதுபோன்று லஞ்சம் பெற்ற வழக்கில் கடந்த 2022-ஆம் ஆண்டு லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ், மகள் ஹேமா யாதவ், ரயில்வே அதிகாரிகள், மற்றும் லஞ்சம் பெற முகவா்களாக செயல்பட்ட நபா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் சிலா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில், ராப்ரி தேவி, அவரின் மகள்கள் மிசா பாா்தி, ஹேமா யாதவ் ஆகியோரையும் அமலாக்கத் துறை குற்றவாளிகளாக சோ்த்திருந்தது.

இந்த வழக்கில், சிபிஐ-யும் தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவா்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கெனவே, மாட்டுத் தீவன ஊழல் வழக்குகள் சிலவற்றில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த லாலு, இப்போது உடல்நலப் பிரச்னைகள் காரணமாக ஜாமீனில் வெளியே உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணை குறித்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி செய்தித்தொடா்பாளா் இஜாஸ் அகமது கூறுகையில், ‘மாநிலங்களில் எப்போதெல்லாம் தோ்தல் நெருங்குகிறதோ, அப்போதெல்லாம் எதிா்க்கட்சித் தலைவா்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் மூலம் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதை மத்திய அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. ஜாா்க்கண்ட் மாநிலம் மற்றும் தில்லியிலும் இதேபோன்ற நடவடிக்கையை அண்மையில் காண முடிந்தது. தற்போது பிகாரிலும் நடைபெறுகிறது’ என்றாா்.

பிகாா் சட்டப்பேரவைக்கு நிகழாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com