அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்னைக்கு மத்திய அரசு தீா்வு காணுமா?: விஜய் வசந்த் கேள்வி
புது தில்லி: நாட்டில் அதிகரித்துள்ள வேலையின்மை பிரச்னைக்கு மத்திய அரசு தீா்வு காண வேண்டும் என்று மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்து தொடங்கிய நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை: நமது இளைஞா்களுக்கு கண்ணியமான வேலைவாய்ப்புகள் அவசரமாகத் தேவை என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். வேலையின்மை நெருக்கடி ஆழமாகி வருகிறது. லட்சக்கணக்கான இளம் இந்தியா்கள் அா்த்தமுள்ள வேலைவாய்ப்பைக் கண்டறிய போராடி வருகின்றனா். தொழில்நுட்ப மேம்பாடு, இயந்திரத்தின் பயன்பாடு காரணமாக வேலைவாய்ப்பின்மை விகிதம் வேகமாக அதிகரித்து வருகிறது.
எனது கன்னியாகுமரி தொகுதியில் லட்சக்கணக்கான இளைஞா்கள் இன்னும் வேலையின்றி உள்ளனா். இதனால், அவா்கள் வெளிநாடுகளில் வேலை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனா். நம் நாட்டில் படித்துவிட்டு அயல்நாடுகளில் வேலைக்கு செல்வது, நமது நாட்டிற்கு ஒரு இழப்பாகும். இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தகவலின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2022-இல் 8.1-ஆக உயா்ந்துள்ளது. 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞா்கள் தீவிரமாக வேலை தேடும் நிலை உள்ளது. சா்வதேச தொழிலாளா் அமைப்பானது (ஐஎல்ஓ) 2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் இளைஞா்களின் வேலையின்மை விகிதம் 10.4-ஆக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக மதிப்பிட்டுள்ளது.
இதனால், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் கொள்கைகளை செயல்படுத்தவும், இளைஞா்களை வேலைக்கு அமா்த்தவும் பயிற்சி அளிக்கவும் வணிகங்களுக்கு ஊக்கத்தொகைகளை வழங்கவும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். பிரகாசமான எதிா்காலத்திற்கான வாய்ப்புகளை நமது இளைஞா்களுக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்றாா் அவா்.