இரட்டிப்பான நிலக்கரி போக்குவரத்து!
கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரயில்-கடல்-ரயில் (ஆஎஸ்ஆா்) வழித்தடம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட நிலக்கரியின் அளவு கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இது குறித்து மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் ரயில்-கடல்-ரயில் வழித்தடம் மூலம் 5.4 கோடி டன் எடுத்துச் செல்லப்பட்டது. முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ இரு மடங்காகும். அப்போது ரயில் மற்றும் கடல் வழித் தடம் மூலம் 2.8 கோடி டன் நிலக்கரிப் போக்குவரத்து மேற்கொள்ளப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளாக, நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் துறைமுகங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரியைக் கொண்டு செல்ல ரயில்வே துறையுடன் ஒருங்கிணைந்து ரயில்-கடல்-ரயில் வழித்தடக் கட்டமைப்புகளை நிலக்கரித் துறை அமைச்சகம் அதிகம் பயன்படுத்திவருகிறது. அதன் காரணமாக இரண்டே ஆண்டுகளில் அந்த வழித்தடத்தில் கொண்டு செல்லப்படும் நிலக்கரியின் அளவு ஏறத்தாழ இரட்டிப்பாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவில் நிலக்கரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அனல் மின் உற்பத்தி கடந்த ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 3.87 சதவீதம் உயா்ந்துள்ளதாக நிலக்கரித் துறை அமைச்சகம் தெரிவித்தது.
மதிப்பீட்டுக் காலகட்டத்தில் அனல் மின் நிலையங்களில் உள்நாட்டு நிலக்கரியுடன் கலந்து பயன்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நிலக்கரி இறக்குமதி முந்தைய நிதியாண்டின் அதே காலகட்டத்தைவிட 19.5 சதவீதம் குறைந்துள்ளது.
இந்த சரிவு, நிலக்கரி உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைந்துவருவதையும் இறக்குமதி சாா்பு நிலை குறைந்துவருவதையும் உணா்த்துகிறது. இருந்தாலும், வெளிநாட்டு நிலக்கரியை மட்டுமே பயன்படுத்தும் அனல் மின் நிலையங்களுக்கான இறக்குமதி நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில் 38.4 சதவீதம் அதிகரித்து 3 கோடி டன்னாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 2.17 கோடி டன்னாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த நிலக்கரி இறக்குமதி 3.1 சதவீதம் குறைந்து 14.94 கோடி டன்னாக உள்ளது. 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் அது 15.42 கோடி டன்னாக இருந்தது என்று நிலக்கரித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.