
பெங்களூரு : கர்நாடக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மகாராஷ்டிரத்தில் தாக்கப்பட்டதைக் கண்டித்து கர்நாடகம் முழுவதும் சனிக்கிழமை(மார்ச் 22) ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக கர்நாடக ஆதரவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
கர்நாடக மாநில மண்டல போக்குவரத்து கார்ப்பரேசன் பேருந்து ஓட்டுநர்கள், மகாராஷ்டிரத்துக்கு பேருந்துகளை ஓட்டிச் செல்லும்போது அங்கே அவர்களுக்கு மராத்தி பேச தெரியாததால் கன்னடத்தில் பேசுவதைக் கண்டித்து அந்த ஓட்டுநர்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த மாதம் 21-ஆம் தேதி கர்நாடகத்தின் பெலகாவி அருகே சென்று கொண்டிருந்த கன்னட அரசுப் பேருந்திலிருந்த மராத்திய இளைஞர்கள் சிலர் அந்த பேருந்து நடத்துநரை தாக்கியதாகக் கூறபடுகிறது. மராத்தி - கன்னட மொழிப் பிரச்சினை காரணமாகவே இந்த சண்டை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. பேருந்திலிருந்த மகாராஷ்டிரத்தை சேர்ந்த இளைஞர்களிடம் கன்னடத்தில் பேசுமாறு நடத்துநர் சொல்லியதாகவும் அதனால் கோபமடைந்த இளைஞர்கள் அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இதனை கண்டித்து நாளை ஒருநாள் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கர்நாடகத்தில் அனைத்து ஓட்டுனர்களும் நாளை ஒருநாள், வாகனங்களை இயக்காமல் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கன்னட அமைப்புகளின் சம்மேளனமான ‘கன்னடா ஒக்குடா’ தலைவர் வாடல் நாகராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாக கால் டாக்ஸி சேவை நிறுவனங்களான ஓலா, உபெர் மற்றும் பெங்களூரு விமான நிலைய டாக்ஸி சங்கம், பல்வேறு ஆட்டோ சங்கங்கள், ஓட்டுநர்கள் சங்கங்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகிய பல்வேறு தரப்பினர் களமிறங்கியுள்ளனர். அந்த வகையில், சுமார் 2,000 அமைப்புகள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக வாடல் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பொது முடக்கத்தால் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனினும், பள்ளி வாகனங்கள் இயங்குவதில் தடை இருகாது என்றும் போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை(மார்ச் 22) நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா? என்பது குறித்து உள்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து பின்னர் அறிவிக்கப்படுமென்று கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பந்த் நடைபெறும்போது பொது சொத்துகளை சேதப்படுத்தினால் சம்பந்தப்பட்ட அமைப்பினரே அதற்கான இழப்பீட்டை செலுத்த வேண்டும் என்று பெங்களூரு காவல் துறை ஆணையர் போராட்டக்காரர்களை எச்சரித்துள்ளார்.
இன்னொருபுறம், போராட்டத்தில் ஈடுபடும் அமைப்பினர் அமைதியான வழியில் அதனை முன்னெடுத்துச் செல்ல, துணை முதல்வர் டி. கே. சிவக்குமார் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக கர்நாடகத்தில் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பேருந்துகள் உள்பட பிற பொது சேவை வாகனங்கள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.