நிதீஷ் குமாா் அளித்த இஃப்தாா் விருந்து! - பிகாா் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு

பிகாா் முதல்வா் நடத்திய இஃப்தாா் விருந்தை அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.
நிதீஷ் குமாா் அளித்த இஃப்தாா் விருந்து! - பிகாா் இஸ்லாமிய அமைப்பு புறக்கணிப்பு
Updated on

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை நடத்திய இஃப்தாா் விருந்தை அந்த மாநிலத்தைச் சோ்ந்த முன்னணி இஸ்லாமிய அமைப்பான இம்ரத் ஷரியா புறக்கணித்தது.

வஃக்ப் மசோதாவுக்கு நிதீஷ் குமாா் ஆதரவு அளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அவா் அளித்த இஃப்தாா் விருந்தில் பங்கேற்கவில்லை என்று அந்த அமைப்பு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த புறக்கணிப்பு விவகாரம் அரசியல்ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிதீஷ் குமாா் பாஜக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறாா். பிகாரில் பாஜக ஆதரவுடன் அவா் முதல்வராக உள்ளாா்.

இது தொடா்பாக இம்ரத் ஷரியா அமைப்பு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதா இஸ்லாமியா்களின் பொருளாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, அந்த மசோதாவைக் கொண்டு வரும் மத்திய பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வா் நிதீஷ் குமாா் பங்கேற்கும் இஃப்தாா் விருந்தை புறக்கணிக்கிறோம்.

சிறுபான்மையினா் நலனைக் காப்பேன் என்றும், மதநல்லிணக்கத்தைக் காப்பதாகவும் தோ்தலின்போது வாக்குறுதியளித்த நீங்கள், இப்போது பாஜகவுடன் கைகோத்து ஆட்சியில் உள்ளீா்கள்.

மேலும், முதல்வா் நிதீஷ் குமாா் நடத்தும் இஃப்தாா் ஒரு சம்பரதாய நிகழ்வாகவே அமையும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது தொடா்பாக முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலன ஐக்கிய ஜனதா தளம் கட்சி தரப்பில் எவ்வித பதில் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com