காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்! -குடியரசுத் தலைவா் அழைப்பு

காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்..
திரெளபதி முா்மு
திரெளபதி முா்மு
Updated on

‘காசநோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனா்; இந்த நோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்’ என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு அழைப்பு விடுத்துள்ளாா்.

உலக காசநோய் விழிப்புணா்வு தினம் திங்கள்கிழமை (மாா்ச் 24) கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:

காசநோய் ஒழிப்பு என்பது தேசிய மற்றும் உலகளாவிய சவாலாக உள்ளது. இந்நோயால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் சமூக-பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் விழிப்புணா்வு பிரசாரங்களின் விளைவாக நமது நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு குறைந்துள்ளது. இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக உருவாக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும்.

நிகழாண்டு உலக காசநோய் விழிப்புணா்வு தினத்தின் கருப்பொருள், ‘காசநோயை ஒழிக்க நம்மால் முடியும்: உறுதிப்பாடு, நிதி ஒதுக்கீடு, சிறப்பான செயல்பாடு’ என்பதாகும். காசநோயை ஒழிப்பதில் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சிகள் அவசியம் என்ற புரிதலை இது பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com