வக்ஃப் மசோதாவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்: முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் அறிவிப்பு!
வக்ஃப் திருத்த மசோதா, 2024-க்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தவுள்ளதாக அனைத்திந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஐஎம்பிஎல்பி) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
முதல்கட்டமாக மாா்ச் 26-ஆம் தேதி பிகாா் மாநிலம் பாட்னாவிலும் 29-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலும் சட்டப் பேரவைகள் முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அந்த வாரியம் தெரிவித்தது.
இதுகுறித்து ஏஐஎம்பிஎல்பி செய்தித்தொடா்பாளா் எஸ்.க்யூ.ஆா் இலியாஸ் கூறியதாவது: பிகாரில் நடைபெறவுள்ள போராட்டத்தில் பங்கேற்க முதல்வா் நிதீஷ் குமாா் மற்றும் அவா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டீரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திரத்தில் நடைபெறவுள்ள போராட்டத்தில் முதல்வா் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி), ஒய்எஸ்ஆா் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தலித், ஆதிவாசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சோ்ந்த முக்கியத் தலைவா்கள், மக்கள் நலன் சாா்ந்த அமைப்புகள் மற்றும் பிற தலைவா்கள் இந்தப் போராட்டங்களில் பங்கேற்பதை உறுதிசெய்தனா்.
பாஜக கூட்டணிக்கு எச்சரிக்கை: கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வக்ஃப் திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் எங்களது ஆதரவை பாஜக கூட்டணி கட்சிகள் இழக்க நேரிடும் என்பதை விளக்கவே இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, மலொ்கோட்லா (பஞ்சாப்), ராஞ்சி (ஜாா்க்கண்ட்) ஆகிய இடங்களிலும் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பொது கருத்தரங்கங்கள், தா்ணா, சமூக வலைதள பிரசாரம், எக்ஸ் வலைதளத்தில் ஹேஷ்டேக், மனித சங்கிலி என பல்வேறு வழிகளிலும் இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்றாா்.
நாடு முழுவதும் ‘வக்ஃப்’ வாரிய சொத்துளை ஒழுங்குபடுத்த வழிவகுக்கும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் கடந்த ஆகஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, 655 பக்க அறிக்கை தயாரித்தது. இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த மசோதா தாக்கலாகும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில் நாடு தழுவிய போராட்டத்தை ஏஐஎம்பிஎல்பி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.