மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

மாணவர்களின் மனநலன் சார் பிரச்சினைகளைக் களைய நடவடிக்கை
மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு!
Published on
Updated on
1 min read

புது தில்லி: உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் மனநலன் சார் பிரச்சினைகளைக் களையவும் அவற்றுக்கு தீர்வு காணவும் ஏதுவாக தேசிய அளவிலான செயற்குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று(மார்ச் 24) உத்தரவிட்டுள்ளது.

தில்லி ஐஐடியில் பயின்ற மாணாக்கர்கள் இருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், தங்கள் பிள்ளைகள் மேற்கண்ட கல்வி நிறுவனத்தில் சாதி ரீதியான பாகுபாட்டாலும் தங்களுக்கு திணிக்கப்பட்ட அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் வழக்குப்பதிய தவறிவிட்டதாகவும் அவர்தம் பெற்றோர்கள் குற்றஞ்சாட்டியிருப்பதுடன் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு இன்று(மார்ச் 24) நீதிபதிகள் ஜே. பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையில் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டிருப்பதாவது:

கல்வி நிறுவன வளாகத்துக்குள் தற்கொலை உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏதும் நிகழ்ந்தால் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் தரப்பிலிருந்து உரிய அதிகாரிகளால் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்படுவதை உறுதி செய்வது கட்டாயக் கடமையாகும்.

கல்வி நிறுவனங்கள் வெறுமனே கல்வியறிவை கற்பிக்கும் இடம் மட்டுமல்ல; மாணவர்களின் நலன் மற்றும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் இந்நிறுவனங்களே பொறுப்பாகும் என்று உச்சநீதிமன்றம் எடுத்துரைத்துள்ளது. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு அங்கு பயிலும் மாணவர்கள், தங்கள் மீது எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை, பயமின்றி இங்கு நாம் படிக்கலாம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்பதை உணர வழிவகை செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தற்கொலை குறித்த இவ்விவகாரத்தில் இந்த செயற்குழு உரிய விசாரணை நடத்தி அடுத்த நான்கு மாதங்களில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விரிவான விசாரணை அறிக்கையை 8 மாதங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவுக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய செயற்குழு விவரம்:

  • மருத்துவர் அலோக் சரின்

  • பேராசிரியர் மேரி இ. ஜான்

  • அர்மான் அலி(மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்புகளை அமைத்து தரும் தேசிய அளவிலான மையத்தின் செயல் தலைவர்)

  • பேராசிரியர் ராஜேந்தர் கச்ரோ

  • மருத்துவர் அக்சா ஷைக்

  • மருத்துவர் சீமா மெஹ்ரோத்ரா

  • பேராசிரியர் விர்ஜினியஸ் க்ஸாஸா

  • மருத்துவர் நிதி எஸ். சாபர்வால்

  • அபர்ணா பட்(வழக்குரைஞர்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com