முஸ்லிம்களுக்கு பாதுகாப்பானது உத்தரப் பிரதேசம்: யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பேட்டி...
யோகி ஆதித்யநாத்..
யோகி ஆதித்யநாத்.. ANI
Published on
Updated on
1 min read

உத்தரப் பிரதேசம் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை தெரிவித்தார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் சிறப்பு நேர்க்காணலில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநிலம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

அப்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியதாவது:

”100 ஹிந்து குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் ஒரு முஸ்லிம் குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறது. அவர்களால் அனைத்து மத ரீதியிலான வழிபாடுகளும் சுதந்திரமாக செய்ய முடிகிறது. ஆனால், 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு மத்தியில் வாழும் 50 ஹிந்து குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்றால் இல்லை. உதாரணம் பாகிஸ்தானும் வங்கதேசமும்தான்.

உத்தரப் பிரதேசம் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக இருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் 2017 ஆம் ஆண்டுக்கு முன்னதாக கலவரம் நடைபெற்றிருக்கிறது. ஹிந்து கடைகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் கடைகள் எரிக்கப்பட்டது. ஹிந்து வீடுகள் எரிக்கப்பட்டால், முஸ்லிம் வீடுகள் எரிக்கப்பட்டது. ஆனால், 2017-க்கு பிறகு கலவரம் நடைபெறவில்லை. ஹிந்துக்கள் பாதுகாப்பாக இருந்தால், முஸ்லிம்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

நான் ஒரு சாதாரண உத்தரப் பிரதேச குடிமகன். நான் அனைவரின் மகிழ்ச்சியையும் விரும்பும் ஒரு யோகி. அனைவரின் ஆதரவையும் வளர்ச்சியையும் நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு யோகி பதிலளித்ததாவது:

”ராம நவமி, ரமலான் போன்ற பண்டிகையின்போது நிர்வாகங்களுடன் கலந்துரையாடி வழிகாட்டு நெறிமுறைகளை தயாரிக்கிறோம்.

உத்தரப் பிரதேசத்தில் ஹோலி பண்டிகையின்போது திரைகளால் மசூதிகள் மூடப்பட்டது. மசூதிகள் மீது வண்ணம் வீசக் கூடாது என்று கடுமையான வழிகாட்டு நெறிமுறை இருக்கிறது. வண்ணங்கள் யாருக்கும் தீங்கு விளைவிக்காது. மொஹரம் பண்டிகையின்போது பேரணிகள் நடத்துகிறார்கள், அவர்களின் கொடியின் நிழல் கோயில் மீது விழுவதில்லையா? அந்த நிழல் ஹிந்துக்கள் வீட்டை அசுத்தமாக்குமா?” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com