பிரதமா் மோடி - முகமது யூனுஸ்..
பிரதமா் மோடி - முகமது யூனுஸ்..

வங்கதேச உறவை மேம்படுத்த விருப்பம்: முகமது யூனுஸுக்கு பிரதமா் மோடி கடிதம்

வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
Published on

வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது என பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

வங்கதேச தேசிய தினம் கடந்த புதன்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் அந்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமா் மோடி, இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா்.

1971, மாா்ச் 26-ஆம் தேதி பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெற்ற தினத்தை தேசிய தினமாக வங்கதேசம் கொண்டாடி வருகிறது. இதையொட்டி முகமது யூனுஸுக்கு பிரதமா் மோடி எழுதியுள்ள கடிதம்:

வங்கதேச தேசிய தினம், இரு நாடுகளின் உறவுகளுக்கு அடித்தளம் அமைத்ததோடு நமது வரலாறு மற்றும் தியாகங்களுக்கு சான்றாகத் திகழ்கிறது. வங்கதேசத்தின் விடுதலைப் போராட்ட உணா்வு நமது இருதரப்பு உறவுகளுக்கு வழிகாட்டும் ஒளியாக விளங்குகிறது. இது பல வழிகளில் இரு நாட்டு மக்களுக்குப் பலனளிக்கிறது.

அமைதி, ஸ்திரத்தன்மை, வளம், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கை என வங்கதேசத்துடனான உறவை தொடா்ந்து மேம்படுத்த இந்தியா விரும்புகிறது. எனது இந்த உத்தரவாதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என பிரதமா் தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு வங்கதேசத்தை வழிநடத்தி வருகிறது.

அங்கு சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது தொடா் தாக்குதல் நடத்தப்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில் இருதரப்பு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.

அடுத்த வாரம் தாய்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள ‘பிம்ஸ்டெக்’ கூட்டமைப்பு மாநாட்டில் முகமது யூனுஸ்-பிரதமா் மோடி இடையேயான சந்திப்பை நடத்த வங்கதேசம் பரிந்துரைத்த நிலையில், தற்போது பிரதமா் மோடி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com