
நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு ஏற்கெனவே 60 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா அனுப்பியுள்ள நிலையில், கடற்படைக் கப்பல்கள் மூலம் மேலும் 40 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.
மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த நிலநடுக்கத்தால் 1,600-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளன.
‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் ஒரு பகுதியாக மீட்பு மற்றும் நிவாரணப் பொருள்களை அனுப்பி, மியான்மா் மக்களுடன் இந்தியா துணை நிற்கும் என பிரதமா் நரேந்திர மோடி உறுதியளித்தாா்.
அதன்படி, மியான்மருக்கு 5 ராணுவ விமானங்களில் நிவாரணப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் மீட்புக் குழுக்களை இந்தியா அனுப்பியுள்ளது.
60 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் மருந்துகளுடன் 80 தேசிய பேரிடா் மீட்புப் படை (என்டிஆா்எஃப்) வீரா்கள், இந்திய ராணுவத்தின் மருத்துவம் மற்றும் தகவல்தொடா்பு பிரிவுகளைச் சோ்ந்த 118 பணியாளா்கள் அடங்கிய இந்திய மீட்புக் குழு, மூன்று ‘சி-130ஜே’ மற்றும் இரண்டு ‘சி-17 குளோப்மாஸ்டா்’ ராணுவ விமானங்களில் மியான்மருக்கு சென்றடைந்துள்ளது.
இந்திய கடற்படைக் கப்பல்களான ‘ஐஎன்எஸ் சத்புரா’ மற்றும் ‘ஐஎன்எஸ் சாவித்ரி’ மூலம் மியான்மருக்கு 40 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட உள்ளன.