
பயணிகள் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளில் பல புதிய மாற்றங்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவை இன்று(மே 1) முதல் நடைமுறைக்கு வருகின்றன.
ஒவ்வொரு நாளும் இந்திய ரயில்வே இயக்கும் ஆயிரக்கணக்கான ரயில்களை லட்சக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களது வசதிக்காகக் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய மாற்றங்கள் குறித்து ரயில் பயணிகள் அனைவரும் நிச்சயம் அறிந்திருக்க வேண்டும்.
முதல் பெரிய மாற்றம்..
புதிய விதியின்படி, ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து, காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், அந்த டிக்கெட் வைத்திருப்பவர்கள் பொதுப் பெட்டியில் மட்டுமே பயணிக்க முடியும். காத்திருப்போருக்கான டிக்கெட் வைத்திருப்பவர்கள் படுக்கை வசதி அல்லது குளிர்சாதன வசதிகொண்ட பெட்டிகளில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
எனவே, டிக்கெட் எடுத்து வெயிட்டிங் லிஸ்ட்ல் இருந்தால் அவர்கள் பொதுப் பெட்டியில் மட்டுமே பயணிக்க வேண்டும். வேறு பெட்டிகளில் ஏறினால் அபராதம் விதிக்கப்படும்.
தத்கல் டிக்கெட்
தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் உறுதிப்படுத்துதல் அவசியம். உறுதி செய்யப்பட்ட தத்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது. தத்கல் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் முதல் 30 நிமிடங்கள் ஏஜெண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பயணிகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
இதுவரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யும்போது பணத்தைத் திரும்பப் பெற 5-7 நாள்கள்வரை ஆகும் நிலையில், இனி 48 மணி நேரத்துக்குள் பணம் திரும்ப கிடைத்துவிடும்.
எனவே, ரயில் டிக்கெட்டுகளை கவுண்டர்கள் அல்லது ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும்போது வங்கிக் கணக்கு விவரங்களை பயனாளர்கள் சரியாக அளிக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் டிக்கெட் ரத்து செய்யும்போது பணம் திரும்பக் கிடைக்கும்.
சில சேவைகளுக்கான கட்டணங்களிலும் ரயில்வே மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக முன்பதிவு டிக்கெட் கட்டணம் ரூ.20 முதல் ரூ.60 ஆக இருந்தது, இப்போது அவை ரூ.30 முதல் ரூ.80 ஆக மாற்றப்பட்டுள்ளது.
இதுவே, அதிவிரைவு எனப்படும் சூப்பர்ஃபாஸ்ட் ரயில்களுக்கான கட்டணம் இப்போது ரூ.20 முதல் ரூ.100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ரூ.15 முதல் ரூ.75 ஆக இருந்தது.
தத்கல் டிக்கெட் கட்டணங்களும் மாற்றப்பட்டு, முந்தைய விலை ரூ.10 முதல் ரூ.500 வரை இருந்த நிலையில் இப்போது ரூ.20 முதல் ரூ.600 ஆக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.