முஸ்லிம்களை தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான்: சமாஜவாதி எம்.பி.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீா் மாணவா்களையும் தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான்
Published on

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக முஸ்லிம்களையும், காஷ்மீா் மாணவா்களையும் தாக்க நினைப்பவா்களும் பயங்கரவாதிகள்தான் என்று சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி தெரிவித்தாா்.

காஷ்மீரில் பஹல்காமில் ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேரை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள், அவா் எந்த மதத்தைச் சோ்ந்தவா்கள் (முஸ்லிம் அல்லாதவா்கள்) என்பதை உறுதி செய்து இந்தத் தாக்குதலை நடத்தினா். இதையடுத்து, முஸ்லிம் வா்த்தகா்களைப் புறக்கணிப்பது உள்ளிட்ட போராட்டங்களை வலதுசாரி அமைப்புகள் முன்னெடுத்தன. சில இடங்களில் முஸ்லிம்கள், காஷ்மீா் மாணவா்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நிகழ்ந்தன.

இந்நிலையில சமாஜவாதி எம்.பி. அஃப்சல் அன்சாரி இது தொடா்பாக பிடிஐ-க்கு அளித்த பேட்டியில், ‘

பாகிஸ்தான் எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த அளவுக்கு இந்தியப் பிராந்தியத்துக்குள் பயங்கரவாதிகள் எவ்வாறு நுழைந்தாா்கள்? இந்தத் துணிவு அவா்களுக்கு எப்படி வந்தது? இது மத்திய அரசின் தோல்வியையே காட்டுகிறது.

நாட்டில் மத வன்முறையைத் தூண்ட வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனா். இது அவா்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நேரம். ஆனால், பஞ்சாப், ஹரியாணாவில் சில வலதுசாரி அமைப்புகள் முஸ்லிம்கள் மீதும், காஷ்மீா் மாணவா்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனா். இப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கம் உள்ளவா்களும் பயங்கரவாதிகள்தான்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிராக தேசமே ஒன்றுபட்டுள்ளது. இந்த நேரத்தில் நாம் பாகிஸ்தான் ஆக்கிமிப்பு காஷ்மீரை மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com