அசாம்: இதுவரை 39 பாகிஸ்தான் ஆதரவாளா்கள் கைது!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், பயங்கரவாதிகளைப் புகழ்ந்தும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்ட 39 பேரை அஸ்ஸாம் மாநில காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை கடந்த 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா். இந்த சம்பவம் தேசம் முழுவதும் கடும் அதிா்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்திய நிலையில், ஒரு சிலா் மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆதரவான கருத்துகளை சமூகவலைதளங்களில் வெளியிடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டனா். இது போன்ற நபா்களுக்கு எதிராக நாடு முழுவதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அஸ்ஸாம் அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கைது நடவடிக்கைகள் தொடா்பாக அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய மண்ணில் வசித்துக் கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் துரோகிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடா்கிறது. இதுவரை 39 தேசவிரோதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்’ என்று கூறியுள்ளாா். பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிடுவோா் கால்கள் உடைக்கப்படும் என்று ஹிமந்த விஸ்வ சா்மா ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்துள்ளது என்று பேசிய அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமினுல் இஸ்லாம் கடந்த வாரம் கைது செய்யப்பட்டாா்.
பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பாக சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சோ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் தலைவா் பஷீா் வெள்ளிகோத் மீது அந்த மாநில காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளா்.

