

பிரதமர் மோடியை விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 போ் கொல்லப்பட்டனா்.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருப்பது தெரியவந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைத்துப் பாா்க்க முடியாத அளவுக்கு கடுமையான பதிலடி தரப்படும் என பிரதமா் மோடி அண்மையில் சூளுரைத்தாா்.
அதன்படி, அட்டாரி-வாகா எல்லையை மூடுவதாக அறிவித்த இந்தியா, பாகிஸ்தானியா்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ரத்து செய்து, அவா்கள் வெளியேற உத்தரவிட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு படைகள் மற்றும் வீரா்கள் பல்வேறு போர் ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரயாக்ராஜ்-மீரட் இடையேயான கங்கா விரைவுச் சாலையில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள 3.5 கி.மீ. நீள அவசரகால ஓடுதளத்தில் முதல் முறையாக போா் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை தொடங்கியது.
விமானப் படையின் தயாா்நிலையில் இருப்பதை உறுதி செய்வதில் முக்கிய மைல்கல்லாகவும் இது அமைந்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் மோடி - விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் இடையிலான சந்திப்பு இன்று(மே 4) நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியா மீது பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை, இந்தியாவுடன் அனைத்து வகை வர்த்தங்களும் நிறுத்தம் முதலான நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.