
புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்கூட்டியே தெரியும் என்கிற சந்தேகத்தை அவர் மீது எழுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து உளவுத் துறையிடமிருந்து பிரதமருக்கு 3 நாள்களுக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ்.
இதனைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி தாம் காஷ்மீருக்குச் செல்லவதாக ஏற்கெனவே திட்டமிட்டிருந்த பயணத்தையும் திட்டமிட்டே தவிர்த்துவிட்டார் என்ற தகவலும் ஊடகங்களில் வெளியாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார் கார்கே.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இன்று(மே 6) செய்தியாளர்களுடன் பேசிய கார்கே, ‘காஷ்மீரின் நிலவரம் குறித்து உங்களுக்கு உரிய தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டாலும், அதனைத்தொடர்ந்து நீங்கள் ஏன் உளவுத் துறை, காஷ்மீர் போலீஸ், பாதுகாப்புப்படை, எல்லைப் பாதுகாப்புப்படை ஆகியோருக்கு இந்த தகவலை தெரிவிக்கவில்லை? அங்குள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் 19-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரிலுள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் ஏப். 22-ஆம் தேதி தாக்குதல் நடத்தினா்.
இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளுமோ என்ற பதற்றம் நீடிக்கிறது. இந்தநிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசின் தோல்வியை இந்த தாக்குதல் சம்பவம் எதிரொலிக்கிறதென பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.