
இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது நடத்திய அதிரடி தாக்குதல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி விளக்கமளித்தார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான 9 பயங்கரவாத மறைவிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இதுபற்றி மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் ஆபரேஷன் சந்தூர் குறித்து விளக்கம் அளித்தனர்.
இந்தச் சந்திப்பில் அப்பாவி இந்திய மக்கள் இதுவரை எவ்வாறு பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்ற காணொலி வெளியிடப்பட்டது.
இந்த செய்தியாளர் சந்திப்பில் மத்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில், “பஹல்காமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மிகவும் கொடூரமானது. குடும்பத்தினர் முன்னிலையில் வைத்து சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக் கொன்றனர். பஹல்காம் தாக்குதல் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சமாக இருந்தது. காஷ்மீர் வளர்ச்சியை தடுப்பதே பாகிஸ்தான் தீவிரவாதிகளின் நோக்கமாக உள்ளது.
பயங்கரவாதத்தின் அடையாளமாக பாகிஸ்தான் மாறி வருகிறது. பஹல்காம் தாக்குதல் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே நடத்தப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் பாகிஸ்தானுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்தியுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனாலே, இந்தியா திருப்பி தாக்குதல் நடத்தியிருக்கிறது. பயங்கரவாதிகளின் புகழிடமாகவும் பாகிஸ்தான் திகழ்கிறது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.