மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்

பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது...
மூன்றே நாள்களில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பேரிழப்பு! - முப்படை அதிகாரிகள்
PTI
Published on
Updated on
2 min read

புது தில்லி: பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று முப்படை அதிகாரிகள் இன்று(மே 11) தெரிவித்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இந்த சண்டை நேற்றிரவு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து தலைமை இயக்குநர் லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி இன்று(மே 11) மாலை செய்தியாளர் சந்திப்பில் விமானப்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் ஏர் மார்ஷல் ஏ. கே. பாரதி, கடற்படை நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் வைஸ் அட்மிரல் ஏ. என். பிரமோத் ஆகியோருடன் சேர்ந்து விளக்கமளித்தார்.

அதில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு 3 நாள் தாக்குதல்களில் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அவர்களின் போர் ஜெட் விமானங்கள்(நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளவை) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தில் 35 - 40 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நள்ளிரவு, அதாவது மே 6-7 இரவில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 9 இடங்களில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களின் பயிற்சி முகாம்கள் ஏவுகணைத் தாக்குதலில் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா உறுதிப்படுத்தியிருந்தது.

எனினும், ஜம்மு-காஷ்மீா் எல்லையில் மோதலைத் தீவிரப்படுத்தி, மக்களின் குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் வடக்கு, மேற்கு மாநிலங்களில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை புதன்கிழமை இரவு, அதாவது, மே 7-8 இரவில் நடத்தியது. இந்தியாவின் வடக்கு, மேற்கு பகுதிகளில் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஜம்மு, ஸ்ரீநகா் மற்றும் அவந்திபுரா, பஞ்சாபில் உள்ள ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. பல ராணுவ இலக்குகளை ட்ரோன்கள், ஏவுகணைகளைப் பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. இதனை இந்தியத் தரப்பு முறியடித்தது. ஒருங்கிணைந்த எதிா் தடுப்பு அமைப்பு(யுஏஎஸ் கிரிட்-ஆளில்லா வான்வழி கண்காணிப்பு), வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்த தாக்குதல்கள் தடுக்கப்பட்டன.

பாகிஸ்தானுக்குப் பதிலடியாக அந்நாட்டின் பல இடங்களில் உள்ள ரேடாா்களையும், வான் பாதுகாப்பு அமைப்புகளையும் குறிவைத்து இந்தியா வியாழக்கிழமை(மே 8 ஆம் தேதி) காலை முதல் தாக்கியது. அதில் அந்நாட்டின் மிகப்பெரிய மாகாணமான பஞ்சாப் தலைநகா் லாகூரில் உள்ள ஒரு வான் பாதுகாப்பு முற்றிலுமாகத் தகா்க்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள ராணுவ இலக்குகளை நோக்கி பாகிஸ்தான் படையினா் வியாழக்கிழமை இரவு தொடா் தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டது. ஜம்மு-காஷ்மீரின் சத்வாரி (ஜம்மு விமான நிலையம்), சம்பா, ஆா்.எஸ்.புரா, அா்னியா ஆகிய பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து வியாழக்கிழமை இரவு ஏவுப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து சுட்டுவீழ்த்தின. அதேபோல் ஜம்மு, பதான்கோட், உதம்பூரை நோக்கி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலும் முறியடிக்கப்பட்டது.

இதனிடையே, அமெரிக்காவின் அழுத்ததத்தால் பாகிஸ்தான் தரப்பிலிருந்து சண்ஐ நிறுத்தம் செய்து கொள்ள இந்தியாவிடம் தொடர்பு கொண்டு பேசப்பட்டது. அதனைத்தொடர்ந்து, நேற்று (மே 10) மாலை 5 மணியிலிருந்து சண்டை நிறுத்தம் அமலானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com