
புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை நிறுத்தம் தற்காலிகமானதே என்று பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூருக்குப் பின் நாட்டு மக்களுடன் முதல்முறையாக ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கைக்குப்பின் தொடர்ச்சியாக ஜம்மு காஷ்மீரிலும், பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதிகளிலும் சண்டை நீடித்தது. இதனால் கடந்த 4 நாள்களாக ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப்பில் அசாதாரண சூழல் நிலவியது. இந்த சண்டை முடிவுக்கு வந்துள்ளதாக கடந்த சனிக்கிழமை(மே 10)மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய ராணுவ உயரதிகாரிகளுடன் பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் முதல்கட்டமாக இன்று(மே 12) பகல் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹாட்-லைன் தொலைபேசி வழியில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை இன்று மாலை 6 மணியளவில் முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் சற்று தணிந்திருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் இன்றிரவு 8 மணிக்கு உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது: “ராணுவத்துக்குச் சல்யூட் அடித்து வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
சுமார் 30 நிமிடங்களுக்குள் தமது உரையை முடிக்குக் கொண்ட பிரதமர் மோடி பாகிஸ்தான் குறித்து பேசியவை: “ஆபரேஷன் சிந்தூரின் முதல் 3 நாள்களிலேயே, இந்தியா பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய அழிவை உண்டாக்கியது.
இந்தியாவின் தீவிர பதிலடியைத்தொடர்ந்து, பாகிஸ்தான் சண்டையை தவிர்க்க வழிகளை ஆராய்ந்தது. அதனையடுத்தே, சர்வதேச சமூகத்திடம் இருநாட்டு பதற்றத்தை தணிக்க கோரிக்கை விடுத்தது.
முழுமையாக தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவம், நமது ராணுவ தலைமையகத்தை தொடர்புகொண்டனர். இது கடந்த 10-ஆம் தேதி நடைபெற்றது.
அப்போது, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் பல்வேறு உள்கட்டமைப்புகளுக்கு நாம் பேரிழப்பை ஏற்படுத்தியிருந்தோம். பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டும் விட்டனர்.
இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தான் நம்மை தொடர்புகொண்டு பேசியபோது, அவர்கள் சில உத்தரவாதங்களை அளித்துள்ளனர். இனிமேலும் பயங்கரவாத நடவடிக்கைகள் எதுவும் நடைபெறாது, ராணுவ ரீதியாக அத்துமீறல்களும் நடக்காது. இதனை எங்கள் தரப்பிலிருந்து உறுதியளிக்கிறோம் என்றனர்.
இதன்பின்னரே, இந்தியா சண்டை நிறுத்தத்துக்கு சம்மதித்தது. மீண்டும் ஒருமுறை நான் சொல்லவிருப்பது இதைத்தான் - பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான, அந்நாட்டின் ராணுவ தளங்கள் மீதான நமது எதிர்வினை தாக்குதல்களை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்திருக்கிறோம்” என்றார்.
“பாகிஸ்தான் ராணுவத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதையும் அதனை ஊக்குவிப்பதையும் வெளிக்காட்ட இதைவிடப் பெரிய ஆதாரம் தேவையில்லை” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.