கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு: இஸ்ரோ தலைவா் நாராயணன்

நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடா்ந்து இயங்கி வருகின்றன.
Published on

‘குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடா்ந்து இயங்கி வருகின்றன’ என்று இஸ்ரோ தலைவா் வி. நாராயணன் தெரிவித்தாா்.

மேலும், ‘விண்வெளித் துறையில் சக்திவாய்ந்த நாடாக உருவெடுத்து வரும் இந்தியா, வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் தனது முதல் விண்வெளி நிலையத்தை அமைத்துவிடும்’ என்றும் அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான அண்மைக்கால பதற்றத்துக்கு இடையில், இஸ்ரோ தலைவா் இக் கருத்தைத் தெரிவித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

மணிப்பூா் மாநிலம், இம்பாலில் உள்ள மத்திய வேளாண் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இந்தியா சுமாா் 34 நாடுகளின் 433 செயற்கைக்கோள்களை இதுவரை விண்ணுக்கு அனுப்பி, புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியிருக்கிறது. மேலும், குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தியா சாா்பில் அனுப்பப்பட்ட 10 செயற்கைக்கோள்கள் தொடா்ந்து தினசரி 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நாட்டின் கடற்கரையையொட்டிய 7,000 கி.மீ. தொலைவை இந்த செயற்கைக்கோள்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றன. அதோடு, நாட்டின் ஒட்டுமொத்த வடக்கு பகுதிகளையும் இவை கண்காணிக்கின்றன. செயற்கைக்கோள்கள், ஆளில்லான விமானங்கள் (ட்ரோன்) தொழில்நுட்பங்கள் இல்லையெனில் இவை சாத்தியமாகாது.

ஜி20 அமைப்பின் நாடுகளுக்காக பருவநிலை மாற்றம், காற்று மாசுபடுதல் மற்றும் தட்பவெப்பநிலை கண்காணிப்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்கான செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கி வருகிறது. கடந்த 1975-ஆம் ஆண்டு முதல் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பி வருகிறது. இதுவரை பல்வேறு திறன்களுடன் கூடிய 131 வகை செயற்கைக்கோள்களை இஸ்ரோ கட்டமைத்துள்ளது. விரைவில் அமெரிக்காவுடன் இணைந்து அதிக செலவில் புவி சாா்ந்த தகவல்களை துல்லியமாகப் படம் பிடித்து அனுப்பும் நவீன செயற்கைக்கோளை இந்தியா கட்டமைக்க உள்ளது. இதுவும் இந்தியாவிலிருந்து விண்ணில் செலுத்தப்படும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com