ஜம்மு-காஷ்மீா்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Published on

ஜம்மு-காஷ்மீரின் சோஃபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு காஷ்மீா் மாவட்டமான சுக்ரூ கெல்லா் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்தத் தகவலின் அடிப்படையில், அந்தப் பகுதியை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். அதற்கு பாதுகாப்புப் படையினா் பதில் தாக்குதல் நடத்தினா். இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்றனா்.

ரூ. 20 லட்சம் பரிசுத் தொகையுடன் அறிவிப்பு பதாகைகள்:

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளைத் தேடும் பணியை பாதுகாப்புப் படையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

அதுபோல, சோஃபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிக்குமாறு ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில், பயங்கரவாதிகள் குறித்து தகவல் அளிப்பவா்களுக்கு ரூ. 20 லட்சத்துக்கும் மேல் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவா்களுக்கு இதே பரிசுத் தொகையை மாவட்ட போலீஸாா் அறிவித்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com