
பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது முப்படைகளும் தக்க பாடத்தைப் புகட்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 13) தெரிவித்தார்.
பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் எச்சரித்தார்.
பஞ்சாப் மாநிலம் ஆதம்பூர் விமானப் படை தளத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள் முன்பு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது,
''ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியாவின் சுயமரியாதை உலக அளவில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. மிகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது. எஸ் 400 நமக்கு மிகப்பெரிய வலிமையைக் கொடுத்துள்ளது.
நமது அதிநவீன தொழில்நுட்ப ஆயுதங்களின் முன்பு பாகிஸ்தானால் போட்டியிட முடியவில்லை. பாகிஸ்தானின் இதயத்தை நாம் எப்போது துளைத்தோம் என்று அவர்களுக்கே தெரியவில்லை.
பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், அதற்கான பதிலடி மிகவும் கடுமையானதாக இருக்கும். நாம் கொடுக்கும் பதிலடி அவர்களுக்கு என்றென்றும் நினைவில் இருக்கும்.
விமானப் படைக்கும் ராணுவப் படைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சிறப்பானதாக இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஆபரேஷன் சிந்தூரில், ஆயுதங்களை வீரர்கள் மிகச்சிறப்பாக கையாண்டனர். முப்படைகளும் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளீர்கள்.
பாகிஸ்தானுக்கு நமது படைகளின் வலிமை என்னவென்று காட்டப்பட்டுள்ளது. இந்தியர்களையும் இந்திய எல்லையையும் தொட நினைப்பவர்களுக்கு ஒரே முடிவுதான், அது அழிவு மட்டும்தான்.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்துவந்த பாகிஸ்தானுக்கு நமது ராணுவப் படையும், விமானப் படையும், கடற்படையும் தகுந்த பாடத்தை புகட்டியுள்ளன.
பயங்கரவாததை ஒழிப்பதே இந்தியாவின் லட்சுமண ரேகை என்பது தெள்ளத்தெளிவாகியுள்ளது. இந்தியாவின் மீது மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால், பதிலடி மிகக் கடுமையானதாக இருக்கும்.
நேற்று கூறிய மூன்று விஷயங்களை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒன்று, இந்தியாவின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வழியில் நாங்கள் பதிலடி கொடுப்போம். இரண்டாவது, அணு ஆயுத அச்சுறுத்தலை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. மூன்றாவது, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் அரசாங்கத்தையும், பயங்கரவாதத்துக்கு மூளையாகச் செயல்படுபவர்களையும் நாங்கள் வேறுபடுத்திப் பார்க்கவில்லை'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இதையும் படிக்க | ஆதம்பூர் விமானப்படை வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.