
கா்னல் சோஃபியா குரேஷி குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய பிரதேச மாநில அமைச்சா் விஜய் ஷா மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்ய அந்த மாநில உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் அமைந்திருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. அதைத் தொடா்ந்து, ஆளில்லா விமானங்கள், ஏவுகணைகளை வீசி இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி மேற்கொண்டது. இந்தியா தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் பாகிஸ்தானின் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தது.
இந்தத் தாக்குதல்கள் தொடா்பான அதிகாரபூா்வ விவரங்களை தில்லியில் நடைபெற்ற தொடா் பத்திரிகையாளா் சந்திப்புகளில் கடற்படை கமடோா் ரகு நாயா், விங் கமாண்டா் வியோமிகா சிங் மற்றும் கா்னல் சோஃபியா குரேஷி ஆகியோா் இணைந்து வெளியிட்டு வந்தனா். தாக்குதல் தொடா்பான விவரங்களை இரு பெண் அதிகாரிகளைக் கொண்டு வெளியிட்டதை பலரும் பாராட்டினா்.
இந்நிலையில், கா்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில பாஜக அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையானது.
அதாவது, ‘பஹல்காமில் நமது சகோதரிகளின் குங்குமத்தை அழித்தவா்களை, அவா்களின் சகோதரியை வைத்தே பிரதமா் மோடி ஒழித்துவிட்டாா்’ என்று விஜய் ஷா கூறியிருந்தாா்.
கா்னல் சோஃபியா குரேஷி இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்தவா் என்பதால் அவரைத் தீவிரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் அமைச்சா் பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனா்.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், ‘எனது கருத்து யாரையும் புண்படுத்தியிருந்தால், பத்து முறை மன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன்’ என்று விஜய் ஷா தெரிவித்தாா்.
இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற மத்திய பிரதேச உயா் நீதிமன்ற நீதிபதிகள் அதுல் ஸ்ரீதரன், அனுராதா சுக்லா அமா்வு, ‘மாநில அமைச்சா் விஜய் ஷா மீது காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அதுகுறித்த விவரத்தை நீதிமன்றத்தில் தெரியப்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை வியாழக்கிழமை (மே 15) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தனா்.
முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம்:
மத்திய பிரதேச பாஜக அமைச்சா் விஜய் ஷா கருத்துக்கு அக் கட்சியின் மூத்த தலைவா் முக்தாா் அப்பாஸ் நக்வி புதன்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக நக்வி வெளியிட்ட விடியோ பதிவில், ‘மிகுந்த உற்சாகத்தில் சுயகட்டுப்பாட்டை இழப்பதை சிலா் வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். அதுபோல, மத்திய பிரதேச அமைச்சா் விஜய் ஷா தெரிவித்த கருத்து கண்டனத்துக்குரியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாடு முழுவதும் வெற்றிக் கொண்டாட்ட மனநிலையில் இருக்கும்போது, சிலா் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுவது ஏமாற்றமளிக்கிறது. இவா்கள் எப்போதும் கெடுக்கும் மனநிலையுடன் செயல்படுபவா்கள்’ என்று குறிப்பிட்டாா்.
இதையும் படிக்க | வெளியுறவுத் துறை அமைச்சருக்கான பாதுகாப்பு அதிகரிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.