பயங்கரவாதத்தைக் கைவிடும் வரை சிந்து நதி நீர் கிடையாது: ஜெய்சங்கர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என்றார் ஜெய்சங்கர்.
ஜெய்சங்கர்
ஜெய்சங்கர் PTI
Published on
Updated on
1 min read

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் சிந்து நதி நீர் பகிர்ந்துகொள்ளப்படாது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (மே 15) தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையானது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரப்பு காஷ்மீரில் சட்டவிரோதமான ஆக்கிரமிப்புகள் குறித்து மட்டுமே இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

தில்லியில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஒந்துராஸ் நாட்டின் தூதரகத்தைத் திறந்துவைத்து அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது,

''ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு வலிமையான ஒற்றுமையை முதன்மையாக வலியுறுத்திய நாடுகளில் ஒந்துராஸும் ஒன்று. ஆபரேஷன் சிந்தூரின்போது பல்வேறு உலக நாடுகளின் ஆதரவு இந்தியாவுக்குக் கிடைத்தது.

காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் பிரச்னைகளில் மூன்றாம் தரப்பு தலையீடுகள் தொடர்பான இந்தியாவின் கொள்கையில் எந்தவித மாற்றங்களும் செய்யப்படவில்லை. பாகிஸ்தான் உடனான நாட்டின் உறவு மற்றும் பரிவர்த்தனைகள் கண்டிப்பாக இருதரப்பு சார்ந்ததாகவே இருக்கும். பல ஆண்டுகளாக தேசிய ஒருமித்த கருத்தாகவே இது உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.

தீவிரவாதம் மற்றும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் குறித்து மட்டுமே பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை இருக்கும் என்பதை பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது.

பயங்கரவாத கட்டமைப்புகளை முற்றிலுமாக பாகிஸ்தான் அகற்ற வேண்டும். பயங்கரவாதத்தை களை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது பாகிஸ்தானுக்குத் தெரியும். பயங்கரவாத ஒழிப்பிற்கு பாகிஸ்தான் செய்தவை குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இத்தகைய பேச்சுவார்த்தைகளே சாத்தியமானவை.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்து எங்கள் இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூரை தொடங்குவதற்கு முன்பு கூட, பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்தே தாக்கவுள்ளதாகவும், ராணுவ முகாம்களை தாக்கப்போவதில்லை எனவும் பாகிஸ்தானுக்கு தெரிவித்திருந்தோம். இதில் தலையிட வேண்டாம் எனவும் பாகிஸ்தானுக்கு செய்தி அனுப்பியிருந்தோம்'' என ஜெய்சங்கர் கூறினார்.

இதையும் படிக்க | இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை நிறுத்தக் கோரிய டிரம்ப்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Open in App
Dinamani
www.dinamani.com