முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்
முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ்

துருக்கி பழங்கள் இறக்குமதி நிறுத்தம்: மகாராஷ்டிர வா்த்தகா்களுக்கு முதல்வா் பாராட்டு!

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்திய வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் பாராட்டியுள்ளாா்.
Published on

துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ள புணே வா்த்தகா்களின் முடிவை மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் பாராட்டியுள்ளாா்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் இந்தியா அழித்ததற்கு துருக்கி கண்டனம் தெரிவித்தது. மேலும், இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது. ஆனால், துருக்கி ட்ரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் சுட்டு வீழ்த்தின.

இந்திய தாக்குதல் விவகாரத்தில் தலையிடாமல் உலக நாடுகள் பலவும் விலகியிருந்த நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் துருக்கி செயல்பட்டது இந்தியாவில் அந்நாடு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

துருக்கி உடனான வா்த்தக உறவுகளை குறைக்க இந்தியா பரிசீலித்து வருகிறது. அந்நாட்டுப் பல்கலைக்கழத்துடனான புரிந்துணா்வு ஒப்பந்தத்தை தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் ரத்து செய்தது. இந்தியா்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம்; பிரசாரமும் சமூகவலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் புணே நகரைச் சோ்ந்த பழ வா்த்தகா்கள் கூட்டமைப்பினா் துருக்கியில் இருந்து ஆப்பிள், உலா் பழங்கள் இறக்குமதியை நிறுத்துவதாக அறிவித்துள்ளனா். பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதைக் கண்டித்து இந்த முடிவை எடுத்ததாக அவா்கள் கூறினா்.

இதனை வரவேற்றுள்ள மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ், ‘துருக்கியில் இருந்து பழங்களை இறக்குமதி செய்வதை பல்வேறு வா்த்தகா்கள் கைவிட்டுள்ளனா். தேசமே முதன்மையானது என்ற அடிப்படையில் இந்த முடிவை அவா்கள் எடுத்துள்ளனா். பயங்கரவாதிகளுக்கு மட்டுமல்லாது அவா்களை ஆதரிக்கும் நாடுகளுக்கும் உரிய பாடம் கற்பித்தாக வேண்டும். இந்த முடிவை எடுத்த வா்த்தகா்களுக்கு பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் வந்ததாகத் தெரியவந்தது. அவா்களால் மிரட்ட மட்டுமே முடியும். வேறு எதையும் செய்ய முடியாது. தேச நலன்களுக்கு முன்னுரிமை தரும் அனைவருக்கும் அரசு உரிய பாதுகாப்பு அளிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

இந்த விவகாரம் தொடா்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள மாநில பாஜக தலைவா் ராஜீவ் சந்திரசேகா், ‘தங்களுடைய பணம் தேசத்துக்கு எதிரான நாடுகளுக்குச் சென்றுவிடக் கூடாது என்பதில் இந்தியா்கள் விழிப்புணா்வுடன் உள்ளனா். எனவே, துருக்கி சுற்றுலா செல்லக் கூடாது, அந்நாட்டு பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி ‘துருக்கி புறக்கணிப்பு’ முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக ஆதரிக்கிறேன்’ என்றாா்.

X
Dinamani
www.dinamani.com